சுகபோகத்துடன் கூட்டமைப்பு; தாக்குகிறார் பெரமுன அமைப்பாளர்


நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் எந்தவோர் அபிவிருத்திகளும் நடக்கவில்லையெனவும் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகின்ற இறுதித் தருணத்திலேயே பட்டதாரிகளுக்கு வேலை வழங்குதல், தொழில் வாய்ப்பு வழங்குதல் போன்ற கண்துடைப்பான வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்களை ஏமாற்றி, தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் நோக்காகக் கொண்டுசெயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

மட்டக்களப்பிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (22)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய சூழ்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களுக்குத் தேவையாக இருப்பது அபிவிருத்தி ஒன்று தான் எனவும் வரவிருக்கின்ற தேர்தலில் வெல்லக்கூடிய ஓர் அரசாங்கத்தை ஆதரித்து அபிவிருத்திப் பணிகளைக் கொண்டு செல்வது தான் எங்களுடைய முக்கியமான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

வெறுமனே தேசியத்தைக் கதைத்து இன்னும் 25 வருடங்கள் பின்னோக்கிச் செல்லாமல் நடைமுறைக்குச் சாத்தியமான வேலைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறிய அவர், இனிவரும் காலங்களில் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளே என்றார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில்தான் “கிழக்கின் உதயம்” என்ற அமைப்பை உருவாக்கி, மட்டக்களப்புக்குத் தேவையான சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டனவெனவும் அன்று மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளையே நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments