பயங்கரவாதியின் சடலத்தை புதைப்பதில் மீளவும் சிக்கல்


பயங்கரவாதி நசார் மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்களை மீண்டும் புதைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியான மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சினைகள் எதுவுமின்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்;டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கடந்த தினம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மொஹமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அதனை மட்டுக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, கள்ளியங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உடல் பாகங்களை புதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்கள் இரவோடு இரவாக இரகசியமாக புதைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கல்லடி பாலத்தில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீதிமறியல் போராட்டத்தால் வீதிபோக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மீண்டும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரின் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த அவர், குறித்த உடற்பாகங்களை மாவட்ட எல்லைக்குள் புதைப்பதற்காக இடத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், அதற்கான இடமொன்றை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணங்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதா என்பது தொடர்பில் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெறவேண்டி ஏற்படும் என்றும், எனினும் அது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments