கிழக்கும் முழு ஆதரவு:முன்னணிக்கும் அழைப்பு?


எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவினை வெளியிட்டுள்ளது.கிழக்குப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே எழுச்சிப்பேரணிக்கான ஆதரவை வழங்கி அதில் கலந்கொள்வோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பின் தலைவி யோ.கனகரஞ்சனி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதுடன் இதில் தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்புவிடுக்கின்றொம். தமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவினை வழங்குவதுடன் எதிர்மறையான, காழ்ப்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் யோ.கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களின் உரிமை சார்ந்து நடத்தப்படுகின்ற எழுக தமிழ்ப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், ஆகையால் அவர்கள் கலந்து கொள்ளாதது கவலையளிக்கிறதெனவும் கூறியுள்ளார்.ஆகவே, இன்னும் காலம் கடந்து போகவில்லை என்பதால் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளிடத்தே முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் பொது மக்களின் பொது நலன்களின் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும், அந்த வகையில் எழுக தமிழ் பேரணிக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments