தந்தைக்கு தண்டனை கொடுத்த மாணவி; ஊரே கையெடுத்து கும்பிடுகிறது!

தமிழகம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருக்கிறது மருதாவனம் கிராமம். இந்த கிராமத்தைச் சேந்த மாணவி நதியா. தமிழகத்தைப் புரட்டி போட்ட கஜா புயல், இந்த கிராமத்தையும் புரட்டிப் போட்டது. அந்த புயல் சேதத்தில் மாணவியின் நதியாவின் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டது. தான் சேர்த்து வைத்திருந்தவை எல்லாம் கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி சின்னாப்பின்னமானதை நதியாவின் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

எல்லா கிராமங்களிலும் மலிந்து காணப்படும் டாஸ்மாக் கடைகள் திருத்துறைபூண்டியிலும் அதிகமாகவே இருந்தன. ஆண்களுக்கு சோகம் என்றால் தான் கடைசரக்கு இருக்கிறதே என்று டாஸ்மாக் கடைத்தேடிச் சென்ற நதியாவின் தந்தை, நாளடைவில் குடிக்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறார். தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வரும் நதியாவின் தந்தை சிவக்குமார், அதன் பின்னர் குடிபோதையில் தன் மனைவியிடம் தொடர்ந்து தகராறும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். 
நன்றாக இருந்த குடும்பம், ஒரு பக்கம் கஜா புயலினால் பொருளாதார நிலையில் பின் தங்கியதும் இல்லமல், தந்தை இப்படி பொறுப்பில்லாமல் குடிக்கு அடிமையாகி, வீட்டின் அன்பும் தொலைந்து போனதே என்று ஏங்க ஆரம்பித்திருக்கிறார் மாணவி நதியா. அதன் பின்னர், தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து, குடித்து விட்டு வரும் தந்தையிடம் இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து, தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். 
மகள் நதியாவிடம் எப்போதும் அளவுக்கு அதிகமான பாசத்துடன் இருக்கும் சிவக்குமாரால், மகள் தன்னிடம் பேசாமல் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல மாதங்களாக மகள், பிடிவாதமாக தன்னிடம் பேசாமலேயே இருப்பதைத் தொடர்ந்து தனது குடிப்பழக்கத்தையும் கைவிட்டிருக்கிறார் சிவக்குமார். அப்போதும் மகள் பிடிவாதமாக தந்தையிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். மகளைப் பேச வைக்க சிவக்குமார் எடுத்த தொடர் முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிய, ‘ என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், என்னிடம் பேசாமல் மட்டும் இருந்து விடாதே.. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று உருக ஆரம்பித்திருக்கிறார் சிவக்குமார். 


குடித்து விட்டு, நன்றாக இருந்த குடும்பத்தை சீரழிக்கப் பார்த்த உங்களுக்கு நிச்சயமாக தண்டனை உண்டு. என்னுடைய பள்ளிக்கு அருகில் இருக்கும் குளத்தில், ஆகாயத்தாமரையும் காட்டாமணக்கு செடியும் புதர் போல மண்டி கிடக்கிறது. உங்களுக்கு தண்டனையான, அந்த குளத்தை முழுவதுமாக தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும். எப்போது, நீங்கள் அந்த குளத்தை சுத்தப்படுத்தி முடிக்கிறீர்களோ அப்போது தான் உங்களுடன் பேசுவேன்’ என்று கூறியிருக்கிறாள் மகள் நதியா.
உடனே களத்தில் இறங்கிய சிவக்குமார், அன்று முழுவதும் காலையிலிருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறார்.  மகளுக்காக கணவர் கஷ்டப்படுவதைப் பார்த்த அவரின் மனைவியும், குளத்தைச் சுத்தப்படுத்த கணவருக்கு உதவியாய் இறங்கியிருக்கிறார். கணவனும், மனைவியுமாக சேர்ந்து ஒரே நாளில் முழு குளத்தையும் தூர் வாரி, சுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இன்று மருதாவனம் கிராமமே மாணவி நதியாவைப் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறது !

No comments