பொய்யென்கிறது கரவெட்டி வைத்திய பணிமனை?


கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி இயங்கும் உணவகங்கள் மீது திட்டமிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகம் சேறுபூசியுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

தமது பிரிவில் 6 உணவகங்ள் 'ஏ' தரத்தில் இயங்குவதுடன் அனைத்து உணவங்களும் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதென தெரிவித்திருப்பதுடன் இந்த வருடத்தில் மட்டும் உணவகங்களுக்கு எதிராக 42க்கு மேற்பட்ட வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் சில உணவகங்களை மட்டும் தரிசித்த ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்த சில பயிலுநர்கள் ஏற்கனவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருத்த வேலைகளுக்காக கால அவகாசம் வழங்கப்பட்ட சில உணவகங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வேறு பிரதேசங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணைத்து ஊடகங்களில் வெளியிட்டதுடன் மிகவும் நல்ல நிலையில் இயங்கி வரும் தரமான உணவகங்களைத் தரிசித்த போதிலும் அதனது படங்களை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்துள்ளார்கள்.

அண்மையில் நடைபெற்ற ஜி.எம்.பி எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் விழாவில் கரவெட்டியைச் சார்ந்த 3 உணவங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனது தரங்கள் உறுதி செய்யப்பட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதற்காக அப்பகுதியினைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பல வருடங்களாக அரும்பாடு பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வெகு விரைவில் அனைத்து உணவங்களுக்குமான தரக் கணிப்பீடு கணணி மயப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளணிக்குறைபாடு உட்பட பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றும் பணியாளரர்களுக்கும் மிகுந்த சிரமங்களின் மத்தியில் தமது தரத்தினைத் தக்கவைத்துக் கொள்ளும் உணவக உரிமையாளர்களுக்கும் ஆளுநர் அலுவலகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த மனச் சோர்வினை ஏற்படுத்தியிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments