திங்கள் முடங்குகின்றன வடகிழக்கு அரச அலுவலகங்கள்?


நாடளாவிய ரீதியில் முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்வரும் திங்கள் பணிபுறக்கணிப்பில் குதிப்பதால் வடகிழக்கு அரச அலுவலகங்கள் முடங்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியலை கருத்தில் கொண்டு நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் நிறைவேற்று சேவை அதிகாரிகளிற்கு ஒரிரவில் 50ஆயிரம் சம்பள ஏற்றம் வழங்கப்படவுள்ளது.

இதனால் அரச சேவையைச் சேர்ந்த 90 வீதமான அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் பாரிய முரண்பாடு ஏற்படவுள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ளது.

இதனோடு இணைந்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை தொழில்நுட்ப சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்பவற்றுடன் மேலும் 17 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

எனவே தமது தொழிற்சங்க போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக, எதிர்வரும் வரும் 23ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து வடமாகாணத்தை சேர்ந்த சகலரும் ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ச.தயாபரன் அழைப்பு விடுத்துள்ளார்.No comments