அமேசன் காட்டுத் தீயும் ஈழத்தமிழரும் - நேரு குணரட்ணம்

அமேசன் காட்டுத் தீ இன்று உலகின் பேசுபொருள்.. வரவேற்க்கத்தக் விடயம். இயற்கையுடனும் சுற்றுச் சூழல் பாதுகாப்புடனும் மோசமாக உரசிப் பார்க்கும் தலைவர்களும், அதன் தாக்கத்தின் பின் விளைவுகள் குறித்த அவ்வித அறிவோ அன்றி அது குறித்த எவ்வித கரிசனையோ அற்ற ஒரு பெரும் பகுதி மக்கள் கூட்டமோ, உள்ள உலகில் இவ்விடயம் எவ்வளவு தாக்கம் செலுத்து;ம் விடயமாக மாற்றம் பெறும் என்பதே கேள்வி... காட்டை அழித்தால் நாங்களும் அழிந்து போவோம் என்பதை தாங்கள் அழியும் வரை, இந்த மக்கள் கூட்டம் உணரப்போவதில்லை என்பதே கசப்பான உண்மை...

எனினும் எதிர்பாராத வட்டாரங்களிலான முயற்சி பெரும் நம்பிக்கை தருகிறது. ஆபிரிக்காவை ஒரு பெரும் பச்சை பெரும் சுவராக மாற்ற அங்குள்ள அரசுகளும் மக்களும் முனைந்து நிற்பது பெரும் பாராட்டுதலுக்கு உரியது மட்டுமல்ல, மிகவும் வரவேற்று வலுப்படுத்த வேண்டிய விடயமாகும். அதிலும் நேற்று தம் உரிமைகளுக்காக  போராடிய மக்கள் கூட்டங்கள், இதில் முதன்மையாக இருப்பது மேலும் பெரு மகிழ்ச்சி தருகிறது. ருவண்டா, எதியோப்பியா, எரித்திரியா என முன்னணியில் உள்ளன. ருவண்டா 30 சதவீத நிலப்பரப்பை காட்டு வனமாக மாற்ற முனைந்து நிற்கிறது... எதியோப்பியா சமீபத்தில் ஒரு நாளில் 350 மில்லியன் மர நடுகையைச் செய்து உலக சாதனை படைத்துள்ளது..

ஒரு தேசத்தின் மண்வளம், நீர்வளம், பயிர்ச்செய்கை வளம், இயற்கை வேளாண்மை எனப் பலவற்றில் அத்தேசத்தின் மரவளம் முதன்மையாகிறது என்பதாலேயே, ஈழவிடுதலை வரலாற்றில் இதுவும் முதன்மையாகக் கொள்ளப்பட்டு மரநடுகை வன்னியெங்கும் முதன்மைப் படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி அத்துமீறிய மரவெட்டல், தடுக்கப்பட்டு அதற்கான தண்டனைகளும்  கடுமையாக்கப்பட்டதுடன், இதற்கான தனித்துவமான நிர்வாக அலகு உருவாக்கப்பட்டு இவ்விடயத்தில் மிகவும் இறுக்கமான போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. மிகவும் வரட்சியான பகுதியை இலங்கைத் தீவில் கொண்டுள்ள தமிழர் தாயகப்பகுதிகளில், இது குறித்த பார்வையும் முன்னெடுப்பும் முக்கியமானது.

ஆனால் 2009இற்கு பின்னர், இவ்வாறு வளத்தெடுக்கப்பட்ட மரங்களே முதலில் வெட்டி ஆக்கிரமிப்பாளர்களால் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் எம்மிடம் இருந்து எவ்வித எதிர்ப்பும் எழவில்லை... அதேவேளை எமது எதிர்காலத்தின் முக்கிய தேவையான தொடர்ந்த மரவளர்ப்பு விவகாரம், நீத்துப் போன விடயமாகியுள்ளது. ஆபிரிக்க உரிமைப் போராட்ட மக்கள் தங்கள் வாழ்வியல் சிறக்க கற்ற பாடங்களை, உணர்வுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கையில் நாம் மாத்திரம் ஏன் எல்லாவற்றிலும் நீத்துப் போகிறோம்?

No comments