சனநாயகப் படுகொலை! அறிவிக்கப்படாத அவசர நிலை! அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சிறை!

ராணுவத்தை வைத்து காசுமீர் மக்கள் மீது கட்டவிழ்த்திருக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான 22.08.2019 டெல்லி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

பாஜக மோடி அரசு காசுமீரில் கடந்த 05.08.2019 அன்று திடீரென லட்சக்கணக்கில் ராணுவத்தைக் குவித்தது; தகவல் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது; எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்களைக் கைது செய்து காவலில் வைத்தது. காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதாக அறிவித்தது; அங்கு அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலையையே ஏற்படுத்தியது. அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இவை அனைத்தையும் செய்திருப்பது சனநாயகப் படுகொலை மட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்கள் மீது அரச பயங்கரவாதத்தையே கட்டவிழ்த்ததாகும்.

திட்டமிட்டுக் காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிட்டு அங்கு அமைதி நிலவுவதாக அடிமை ஊடகங்களைக் கொண்டு கதைகட்டி விடுகிறது சனாதன மோடி அரசு. மோடியின் இந்தக் கொடுங்கோன்மைக்கு அண்ணாவின் பெயரால் ஆட்சியதிகாரத்தைச் சுவைக்கும் அதிமுக அரசும் துணைபோவது தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும்.

மானுடத்திற்கே “அரசியற் பொருளாதாரம் - Political Economy” வகுத்தளித்தவர் காரல் மார்க்சு என்றால், தமிழ்நாட்டிற்கு, ஏன் இந்தியாவுக்கே அரசியற் பொருளாதாரம் வகுத்துத் தந்தவர் அண்ணா; அதனை நாடாளுமன்றத்திலும் எடுத்துரைத்தார். ஆனால் அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்போர் மோடியுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்குக் குழி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரிக்கிறோம்.

காசுமீரில் நடக்கும் அக்கிரமங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இதைப் பார்க்கும்போது, காசுமீர் மக்களை இந்தியாவிடமிருந்து நிரந்தரமாகப் பிரிப்பது அல்லது முற்றிலுமாக அவர்களை ஒழித்துக்கட்டுவது என்ற இந்த இரண்டைத் தவிர மோடி அரசுக்கு வேறு நோக்கமில்லை என்றே தெரியவருகிறது.

வெள்ளையர் விட்டுச் சென்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கார்ப்பொரேட் கொள்ளையரைக் கொண்டு அழித்தொழிக்கவே காசுமீரை அவர்களுக்குக் கைமாற்ற இருக்கிறார் மோடி. இதனை தடுத்து நிறுத்தவும் காசுமீர் மக்களின் சுதந்திரம்-சனநாயகத்தை மீட்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாளை 22.08.2019இல் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்பிக்கள் முன்னணியராய் பங்கேற்கிறார்கள்.

ராணுவத்தை வைத்து காசுமீர் மக்கள் மீது கட்டவிழ்த்திருக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திமுக கூட்டணி எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்தும் இந்த 22.08.2019 டெல்லி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments