இந்து மயானத்தில் பயங்கரவாதியின் தலை!! வியாழேந்திரன் களத்தில்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது நாசர் முகமது அசாத்தின் தலை உள்ளிட்ட உடல்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நேற்று மாலை இரகசியமாக புதைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, அந்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடியை சேர்ந்த முகமது நாசர் முகமது அசாத்தின் உடலை புதைக்கும்படி நேற்று நீதிமன்றம், மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன் பின்னர் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரிடம் இந்த விடயம் குறித்து அரச அதிபர் ஆலோசித்ததாகவும், முதல்வரின் சிபாரிசின் பிரகாரம் மட்டக்களப்பு எம்.பி, ஞா.சிறிநேசனுடன் அரச அதிபர் ஆலோசித்து, கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த பயங்கரவாதியின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடியை சேர்ந்த மனித வெடிகுண்டின் உடல்பாகத்தை, அவரது பகுதியிலேயே புதைக்கும்படியும், தமது பகுதியில் புதைக்க வேண்டாம் என்றும் மட்டக்களப்பு மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே மட்டக்களப்பின் சில பகுதிகளில் மனித எச்சங்களை புதைக்க முயன்றபோதும், மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நேற்று மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட எம்.பி ச.வியாழேந்திரன் தலைமையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாதியின் உடலை குறித்த மயானத்தில் இருந்து அகற்றுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதன் பின்னர் நகரை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் கூட்டுறவு மண்டபத்திற்கு அருகில் பிரதான வீதியில் ரயர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments