கோகுலன் மீதான தாக்குதலிற்கு கண்டனம்?


ஊடகவியலாளர் கு.கோகுலன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு தாயகத்தில் கையளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்க சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொட்டகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் கு.கோகுலன் மீதான தாக்குதலை ஊடகங்கள் மூலமாக அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இத்தாக்குதலினை சிறீரெலோ கட்சியை சார்ந்த கார்த்தீபன் ஈடுபட்டதாக நாங்கள் அறிகின்றோம். மேலும்  வன்முறை மூலமாக ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக வவுனியாவை சார்ந்த ஊடகவியலாளர்கள் எவ்வளவு தூரம் எவ்வளவு நெருக்கடிகளிற்கு மத்தியிலும், எவ்வளவு அழுத்தங்களிற்கு மத்தியிலும் வேலை செய்கின்றனர் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
சிறீரெலோ கட்சியினால் ஊடகம் ஒன்று நடாத்தபடுகின்றது அதில் எங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பல அவதூறு செய்திகளை வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்திருந்தோம். நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகின்றோம் ஜனநாயக ரீதியாக யாரும் எல்லாவற்றையும் கூறமுடியும் என்றாலும் உண்மையை கூறவேண்டும். குறித்த ஊடகம் அவதூறு செய்தியை மாத்திரமே பரப்பி வந்துள்ளது. அதில் உச்சமாக சர்வதேச ஊடகங்களில் வந்த ஒரு செய்தியானது தமிழ் ஊடகங்களிலும் வந்திருந்தது. அதில் முக்கியமான கட்டுரையாக 26 வருடங்களாக தமிழ் சிங்களம் என்ற சட்டத்தை கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்தில் தலைமை தாங்கியது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற தொனிப்பொருளில் வந்திருந்தது. 

மேலும் எங்களது போராட்டத்திற்கு முக்கிய கருப்பொருளாக இருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறீ சேனவிற்கு அருகில் எமது மாவட்ட தலைவி கா.ஜெயவனிதாவின் மகள் ஜெரோமி இருக்கின்ற படத்தை பிரசுரித்து கா.ஜெரோமி விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தார் என்ற அவதூரான செய்தியை அந்த காலகட்டத்தில் குறித்த ஊடகம் பரப்பியிருந்தது. இதன் மூலம் சிறீரெலோ கட்சி எமது தமிழர்களுடைய போராட்டத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது தெரிய வருகின்றது. 
ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை இம்மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கருத்தில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் இதற்கு உடந்தையாகதான் கருத வேண்டும். ஊடக அடக்குமுறைக்கான முற்றுப்புள்ளியினை வைக்காவிட்டால் இவர்கள் சம்மந்தமான பல விடயங்களை ஆதாரபூர்வமாக ஊடகங்களிற்கு தெரிவிக்க வேண்டிவரும்.

வருகின்ற 30ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டங்கள் நடாத்தப்படவுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலே பெரிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். அந்த சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான முக்கியமான ஆவனம் ஒன்றை ஐநாவிடம் கையளிக்கவுள்ளோம். 
இவ்வாறு நாம் முன்னெடுக்கின்ற போராட்டங்களை கோரிக்கைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொண்டு வருகின்றார்கள். இந்த ஊடகத்திற்கும் ஊடகவியலாளருக்கும் எதிரான தாக்குதலானது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான ஊடகவியலார்களை அடக்குவதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பவர்களாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

No comments