சட்டம் நீங்கினாலும் விடுதலையில்லையாம்?

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் மற்றும் தீவிரவாதிகளின் சொத்து முடக்கம் என்பவற்றுக்கு அவசரகாலச் சட்ட நீக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், சிலர் சட்டம் குறித்த தெளிவில்லாமல் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மூன்று அமைப்புகளின் பெயர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம், விலாயத் அஸ்ஸெய்லானி ஆகிய அமைப்புகளே இவையாகும்.  குறித்த அமைப்புகள் மூன்றும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக, 2019.05.13 எனும் திகதியிடப்பட்ட இல 2123/3 எனும் அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய அவசரகால  சட்டத்தை நீடிக்காது இருப்பதன் மூலம், குறித்த அமைப்புகளின் தடை மற்றும் அவ்வமைப்புகள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது எனவும் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனால், தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் 200 பேரும் விடுவிக்கப்படுவர் என பிழையான செய்தியொன்று பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும், அவசரகால சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள், தீவிரவாத தடுப்பு தற்காலிக சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில், அவசரகால சட்டத்தை நீடிக்காமையானது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளையோ, குறித்த கைது தொடர்பிலோ, தடுத்து வைப்பு தொடர்பிலோ, தீவிரவாதிகளின் சொத்துகளை தடை செய்திருப்பது தொடர்பிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் மேலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments