இன, மத பேதமற்ற புதிய அரசை அமைக்க ஆதரவு கோரினார் ரணில்

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசமைத்து இன, மத பேதமற்ற தேசிய சமூகத்தை உருவாக்கி, இந்த நாட்டை சுபிட்சமானதாக கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - மூதூரில் ஐ ரோட் காபட் வீதி திட்டத்தை இன்று (24) மாலை ஆரம்பித்து வைத்த போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,
1990ம் ஆண்டுக்கு முன்னர் மறைந்த இராஜாங்க அமைச்சர் மகரூப்புடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு கடல் வழியாக வந்து மணல் வீதியிலே பயணம் செய்தேன். இன்று தரைவழியாக வந்து ஐ ரோட் காபட் வீதிக்கான அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான விசேட விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளோம். அதேபோன்று உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதற்காக, மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 

நல்லாட்சி அரசு இந்நாட்டை பொறுப்பேற்றபோது கடன் வழங்குவதற்கு கூட எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. எனினும் கடந்த மூன்று வருட காலம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் போதுமான நிதியை வரவழைத்துக் கொண்டோம்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு பின்னர் நாடு அழிந்து விடும் என்று கற்பனை கதை ஒன்றை பொது எதிரணியினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் என்றும் முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம் என்றும் கூறி முஸ்லிம்களின் கடைகளை எரித்தார்கள். 

ஆனால் குறுகிய காலத்தில், இதற்கு எதிராக வெற்றி கண்டோம். கடந்த 30 வருட கால யுத்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு குண்டு வெடித்தால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும். ஆனால் இந்த நிலைமையை மாற்றி அமைத்திருக்கிறோம். என்றார்.

No comments