தம்மை எதிர்ப்பவர்களை மதிக்கிறாராம் OMP ஆணையாளர்

காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எம்மால் கிடைக்கும் உதவித் திட்டங்களால் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என்று தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும், உங்கள் நீதிப் பயணத்தை நீங்கள் தொடர முடியும் என்று காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பானம் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒரு பகுதி உறவுகளுக்கும் அலுவலக ஆணையாளருக்கும் இடையில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,
காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களுக்காகவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த அலுவலகத்தை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆயினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப்படுத்த மட்டும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது.

எமது அலுவலகத்தால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் வலிகளை போக்க முடியாது. நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே எமது பிரதான பணி. இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், காணாமல் போனவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பது சிக்கலான விடயம் அத்துடன் நீண்ட காலம் எடுக்கலாம். உங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை உங்களின் அன்றாட வாழ்க்கைக்கே சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். அது கூட உங்களுக்கு போதாது என்பதை நாம் உணர்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் வெறுமனே காணமல் போனோருக்கு மட்டுமல்ல அவர்களை தேடும் உறவுகளுக்கக்கவுமே. அதனால் தான் சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் எம்மூடாக நீதியை வழங்க வேண்டும் என எதிர்பாக்கிண்றீர்கள். 

நாமும் நீதிக்காக உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவே இருக்கின்றோம்.
சிலர் எமது செயற்பாட்டை விளங்கிக் கொள்ள சிரமப்படலாம். இந்த அலுவலகம் வேண்டாம் என எதிர்க்கும் உறவுகள் சிலர் எம்மை இரகசியமாக சந்தித்து எம்மிடம் பெயரிடப்பட்ட ஐந்து கோவைகளை தந்தனர். அதில் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் கூற வேண்டும். அதுவரை இந்த அலுவலகத்தைத் திறக்கக்கூடாது என்றனர். அப்போது நாம் உங்கள் கோரிக்கையை மட்டும் நாம் விசாரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தரப்புகள் அனைவரதும் கோவைகளையும் விசாரிப்போம் என கூறினோம்.
உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உதவித் தொகையாக 6 ஆயிரம் ரூபாயை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை பெற தற்காலிக சான்றிதழ் தேவையாக உள்ளது. இதனை பெறுவதால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள்.

உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் உங்கள் நீதிப் பயணத்தினை நீங்கள் தொடர முடியும். எமது அலுவலகம் எந்த சந்தர்ப்பங்களிலும் ஏதாவது பிழை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் துணிந்து சுட்டிக்காட்ட முடியும். நாங்கள் மட்டும் செயற்பட வேண்டும் என கருதவில்லை. பாதிக்கப்பட்ட நீங்களும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் அப்போது தான் நாம் விரைவாக உங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். என்றார்.

No comments