முடங்கியது பளை:புதுக்குடியிருப்பில் மூவர் கைது?


கைதாகியுள்ள பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபனுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவித்து புதுக்குடியிருப்பு பகுதியில் மூன்று முன்னாள் போராளிகள் கைதாகியுள்ளனர்.

வைத்தியரை விடுதலை செய்ய வலியுறுத்தி பளை பிரதேச மக்கள் இன்று கடையடைப்பில் குதித்துள்ள நிலையில் நேற்று புதுக்குடியிருப்பு பகுதியில் குறித்த மூன்று முன்னாள் போராளிகளும் கைதாகியுள்ளனர்.

இன்றைய தினம் பளையில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு அளவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதனிடையே நேற்றிரவு யாழ்.காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட வைத்தியர் விசரூபன் கொழும்பிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று அல்லது நாளை கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கடமை நிமித்தம் முல்லைதீவு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் ஆனையிறவில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாத தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

அவர் முல்லைதீவுக்கு பயணம் செய்திருந்த அன்று சந்தித்து உரையாடி மூன்று முன்னாள் போராளிகளே கைதாகியுள்ளனர்.எனினும் புலம்பெயர் தேசத்திலிருந்து கிடைத்த வாழ்வாதார உதவிகள் தொடர்பில் கலந்துரையாடியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments