இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையாம்?


இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் தற்போதைய சூழலில் இல்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார்.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்க்கு விஜயம் செய்திருந்தார்.

இந் நிலையில் நேற்று மாலை கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது சர்வதேச பொலிஸாரின் கணிப்புப்படி இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்கவிடம் வினவினர். இதன்போதே அவ்வாறான வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர ஆகியோரும் இன்டர் போல் செயலாளர் நாயகத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments