பழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட 5 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்கள் பஞ்சாமிர்தம் வாங்குவதற்காகவே பழனிக்கு வருகிறார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு, இந்திய புவிசார் குறியீடு ஆணையத்திடம், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு, விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருள்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருள்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வகையில் தற்போது, பழனி பஞ்சாமிர்தமுக்கு தற்போது இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஏற்கனவே மதுரை மல்லி, பண்ருட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பழனி பஞ்சாமிர்தம் தற்போது இணைந்துள்ளது.

No comments