இனியும் முடியாது:ஆறுதிருமுருகன்


கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சுமார்- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீண்டகாலமாகப் பிள்ளையார் ஆலயம் இருந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மீண்டும் முன்னரிருந்த இடத்தில் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்படாவிடில் குறித்த பகுதியைப் பெளத்தத்தின் அடையாளமாக மாற்றிவிடுவார்கள் என ஆறுதிருமுருகன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் தற்போது புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு அருகில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் இராவணனுக்கும், கன்னியா வெந்நீருக்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்பு முற்றுமுழுதாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாறாக குறித்த பகுதியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகத்தில் கன்னியா வெந்நீரூற்று சிங்கள மன்னன் காலத்துடையது எனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீருற்றைச் சைவமக்களின் வரலாற்றிலிருந்து பெளத்த வரலாறாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வில்கம் விகாரை இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவு கன்னியாவில் இடம்பெறும் பெளத்த மயமாக்கலின் வேகத்தைத் தற்காலிகமாக குறைத்திருக்கிறதே தவிர இதுவே முடிவல்ல.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நானுமிருந்த காரணத்தால் பல்வேறு கஷ்ரங்களுக்கு மத்தியில் சட்டத்துறையை அங்கு ஒரு துறையாக கொண்டு வந்தோம். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் 70 வீதமானவர்கள் சிங்கள மாணவர்களாக காணப்படுகிறார்கள். அதேபோன்று விஞ்ஞானத் துறையில் 70 வீதமான சிங்கள மாணவர்கள் காணப்படுகிறார்கள்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பெளத்த மயமாக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கட்டடத்தை நிர்மாணித்தவன் முதலில் புத்தர் சிலையொன்றை கொண்டு வந்து வைத்தான். பின்னர் மூன்று சமயங்களுக்கும் காணிகள் ஒதுக்குவது தொடர்பாக கலந்துரையாடி அதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் சைவக் கோயிலோ, கிறிஸ்தவ ஆலயமோ கட்டப்படவில்லை. ஆனால், அனுராதபுரத்திலிருந்து பிக்குகள் வருகை தந்து வெள்ளைச் சீலை விரித்து பெளத்த விகாரைக்கான அத்திவாரம் இட்டுத் தற்போது நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இதுதொடர்பாகப் பதிவாளருக்கே இன்னும் தெரியாது.
கிளிநொச்சியில் தமிழ்மக்களின் காணியில் தமிழ்மக்களுக்கெனக் கட்டப்பட்ட பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் இடம்பெறுகிறது. ஏற்கனவே, குறித்த வளாகத்திற்குள் புத்தர் சிலையொன்று காணப்படும் நிலையிலேயே மீண்டும் இவ்வாறான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பில் கேள்வி கேட்பதற்கு எவருமில்லை.
மாங்குளத்திலிருந்து பளை- இயக்கச்சி வரை தற்போது பல புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலை தற்போது தான் உருவாகியுள்ளது. காங்கேசன்துறையை சுற்றிப் புத்த கொயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதகலில் சங்கமித்தை வந்து இறங்கியதாக கூறி பட்டிணத்துக்குப் பெயரை மாற்றியுள்ளனர். ஆனால், அதேபகுதியில் அமைந்துள்ள எமது ஆலயங்களுக்கு மட்டும் ஏன் இன்றுவரை விளக்கு வைக்க அனுமதிக்கிறார்களில்லை? நாவற்குழியில் பெரு விகாரை அமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கென மாதகல் போன்றவிடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் சுக்கிலவாரச் சத்திரத்தை இராணுவத்தினர் தங்களுடைய நடைபாதைப் பயிற்சிக்குரிய இடமாகப் பயன்படுத்துகிறார்கள் என ஆறுதிருமுருகன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.. 

No comments