நீதி கிடைக்காத 29 ஆண்டுகள் - நினைவேந்தல்

1990ம் ஆண்டு மட்டக்களப்பு - சித்தாண்டி சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய நலன்புரி முகாமில் வைத்து இராணுவச் சுற்றிவளைப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 99 பேரின் 29ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (23) சித்தாண்டி முருகன்  ஆலய முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேசத்தின் சிவில் அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மர நடுகையும் இடம்பெற்றது. 

நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமத பெரியோர்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரும் ஏற்பாட்டாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர். 

அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்ட இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட மூன்று தடவைகள் சுற்றி வளைப்பின் போது 99 பேரை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாக கருதப்பட்ட முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டனர்.

No comments