சித்தர் துண்டுபோட்டார்:திண்டாடும் டெலோ?


அடுத்து வரும் தேர்தலில் மகிந்த பக்கம் டக்ளஸ் முதல் வரதராசாப்பெருமாள் வரை துண்டுவிரித்துவிட்டு காவலிருக்க கூட்டமைப்பு கட்சிகள் திண்டாட தொடங்கியுள்ளன.

எமது கட்சி இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவில்லை. முடிவுகள் தொடர்பில் அவசரப்பட தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எந்த தேசிய கட்சிகளும் இது வரை தங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையே தற்போது காணப்படுகின்றது. நாம் முடிவுகள் எடுப்பதற்கு யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகின்றார்கள் என்பது அறிவிக்கப்படல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார் என்பதில் எமது கட்சி அதிக கவனம் செலுத்தப் போவதில்லை. குறித்த கட்சிகளினால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தையே நாங்கள் கூர்ந்து அவதானிப்போம். அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைகளுக்கும், மக்கள் எதிர் நோக்குகின்ற ஏனைய அரசியல், அன்றாட பிரச்சினைகளுக்காக முன் வைக்கப்போகின்ற தீர்வுகள், எப்படி அப்பிரச்சினைகளை அணுகுகிறார்கள் என்பது தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்.

மேலும் எமது மக்களின் அபிலாசைகளையும் நிலைப்பாட்டினையும் நாங்கள் துல்லியமாக உணர்ந்துள்ளோம். அதே போன்று நமது போராட்டங்களுக்கும், அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச சமுகத்தின் விருப்பினையும், நிலைபாட்டினையும் தெரிந்து கொண்ட பின்னர் முடிவினை எட்டுவது உசிதமாக இருக்கும் என கருதுகின்றோம்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களினதும், புலம்பெயர் தமிழ் மக்களினதும், எங்களுக்கு வலுச்சேர்கின்ற புலம்பெயர் அமைப்புக்களின் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம். எமது கட்சி உறுப்பினர்களோடு மாத்திரமல்லாது, சர்வதேச உறவுகளோடும், புலம்பெயர் அம்மைப்புக்களோடும் இணைந்து வேலைதிட்டங்களை மேற்கொண்டு வருகின்ற எமது கட்சியின் சர்வதேச கிளை உறுப்பினர்களோடும் இது தொடர்பில் கலந்தாலோசித்து வருகின்றோம். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அலசி ஆரய்ந்து தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள வேட்பாளரை அல்லது வேட்பாளர்களை நேரில் சந்தித்து எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைப்பது பற்றியும் பரிசீலிப்போம்.

எமது கட்சியின் அரசியல் குழு, தலைமைக்குழு போன்ற உயர் பீடங்களை சில தடவையோ, பல தடவையோ கூடி தேவையேற்படின் பொதுக்குழுவையும் கூட்டி இது தொடர்பான முடிவுகளை எட்டிய பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான நாங்கள் ஏனைய அங்கத்துவக்கட்சிகளுடனும் கலந்துரையாட கடமைப்பட்டுள்ளோம். இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை துண்டாட முயற்சிப்பவர்களையோ அல்லது இதன் மூலம் எமது பலத்தினை நசுக்க முயற்சிபவர்கள் தொடர்பில் நாங்கள் விழிப்பாகவும், ஒற்றுமையாகவும் அவதானமாகவும் கையாள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். ஆகவே எங்களுடைய அங்கத்துவக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவுகளை எட்டிய பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் தமது நிலைப்பாடு என்ன என்பதனை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அறிவிக்கும். அது வரை எமது கட்சி எந்த விதமான அவசர முடிவுகளையும் எடுக்க மாட்டாது.

அவசரமாகமோ அல்லது உணர்வுபூர்வமாகவோ நாங்கள் இதில் முடிவுகளை எட்டாது மிக அவதானமாக நகர்வுகளை மேற்கொள்ள மேண்டியது தமிழ்மக்களின் எதிர்காலத்துக்கு அவசியமானதொன்றாகும். தமிழ் மக்களின் ஐக்கியத்தை குலைப்பற்கு அல்லது எம்மை துண்டாடி தமிழ் மக்களின் பலத்தை குறைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காது நிதானமாகவும், அவதானமாகவுமே எமது முடிவுகளை எடுப்போம். எடுக்கும் முடிவுகளை நிச்சயமாக மக்களுக்கு தெரிப்போம் என தெரிவித்துள்ளார்.

No comments