படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவப் படையினர் நேற்றிரவு மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். குறித்த பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிக்கொண்டு நின்ற மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகனத்தின்  சாரதியை நோக்கி 15 துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்திருக்கிறார்கள் .தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறை பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இவர்களுடைய நிலைகளை கேள்விப்பட்ட வெடிச்சத்தம் கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர்,பொலிஸார் ஆகியோரை அழைத்து குறித்த தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வருமாறு கூறி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்றனர்.அவர்களை அந்த இடத்திற்கு ராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததோடு போலீசார் கைது செய்ய மறுத்திருந்தனர். இந்நிலையில் காயம் பட்ட நபர் 1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார் .இந்நிலையில் குறித்த இடத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரிய போதும் போலீசார் கைது செய்யாத நிலையில் தற்போது குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் வந்து அவரை கைது செய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி அந்த இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

No comments