ராடரை காணோம்?


கடந்த 2014ஆம் ஆண்டு  திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர்  றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன, தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தகவல் இருந்து தெரியவந்துள்ளது. 
நாடாளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு  சிறிலங்கா விமானப்படையின் சட்ட பணிப்பாளர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தொலைந்து போன கருவிகளின் பெறுமதி 98 மில்லியன் ரூபா என்றும், இவை எவ்-7 போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தவை என்றும் கூறியுள்ள விமானப்படை சட்ட பணிப்பாளர், இவை ஏதாவதொரு தீவிரவாதக் குழுவின் கையில் சிக்கினால், தேசிய பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சிறிலங்கா விமானப்படையின் நற்பெயரையும் கெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு அண்மையில் எழுப்பியிருந்த கேள்வியை அடுத்தே சிறிலங்கா விமானப்படை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது,
குற்றப் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, உள்ளூர் சரக்கு அனுப்புநரான எம்/எஸ் கெயார் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அந்த கருவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நிறுவனத்தின் இணையதள இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
சிறிலங்கா ஏற்றுமதியாளர் சபையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த, அந்த நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளரின் அலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை.
அதைவிட, சிறிலங்கா விமானப்படையின் வெளிநாட்டு பழுதுபார்ப்பு மற்றும் சேவைகள் பிரிவு, இவற்றை அனுப்புவதற்கு முன்னர் காப்புறுதி கொள்கையை எடுக்கத் தவறிவிட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதனால்,சிறிலங்கா விமானப்படையினால் காப்புறுதி மூலம் இழப்பை ஈடுசெய்யவும் முடியவில்லை.
மிக் 21 போர் விமானத்தின் மறுவடிவமான எவ்-7 போர் விமானத்தை சீனா தயாரிக்கிறது, இதனால் பழுதடைந்த ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன எம்/எஸ் கெயார் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம், பழுதுபார்ப்பதற்காக சீனாவுக்கு அனுப்பப்பட்டன.
இந்தக் கருவிகளின் பெறுமதி 536,000 டொலர் ஆகும். இவற்றை பீஜிங்கிற்கு அனுப்புவதற்கும் சிறிலங்கா விமானப்படை மில்லியன் கணக்கான ரூபாக்களை செலுத்தியுள்ளது.
உள்ளூர் சரக்கு அனுப்புநர் இந்த கருவிகள் அடங்கிய பொதியை 2014 ஏப்ரல் மாதம் எயர் ஏசியா சரக்கு பிரிவில் கையளித்துள்ளார். கோலாலம்பூர் வழியாக சீனாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் இந்தக் கருவிகள் அடங்கிய பாதி சீனாவில் ஒப்படைக்கப்பட வேண்டிய இடத்தைச் சென்றடையவில்லை.
இதுகுறித்து, தொடர்ச்சியாக உள்ளூர் சரக்கு ஆனுப்புநரிடம் விசாரித்த போதும், திருப்திகரமான பதிலை விமானப்படைக்கு வழங்கவில்லை.
இந்தக் கருவிகள் காணாமல் போய், ஒரு ஆண்டு கழிந்த நிலையில், 2015 ஜூன் மாதம், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விமானப்படையின் சட்ட பணிப்பாளர், சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.
காணாமல்போன பொதியைக் கண்டுபிடிக்க, கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் உதவியையும் விமானப்படை நாடியது. எனும், அவர்களாலும் கண்டறிய முடியவில்லை.
கோலாலம்பூருக்கும், இறுதி இலக்கான சீனாவுக்கும் இந்தக் கருவிகளை அனுப்ப  விமானப் போக்குவரத்து வசதியை முன்பதிவு செய்திருந்ததை விமானப்படை தனது தடய முறையில் இருந்து கண்டறிந்தது. ஆனால் அந்தப் பொருட்கள் அந்தந்த இடங்களுக்கு விமானத்தில் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்தக் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஏனெனில் சரக்கு அனுப்புபவர் சரக்குகளை தவறாக வைத்திருப்பதற்கு எந்தவொரு சரியான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
காப்புறுதி மூலம் இழப்பீடு வழங்க மட்டுமே ஒப்புக்கொண்டது, ஆனால் விமானப்படை இதை நிராகரித்தது, ஏனெனில் இது இழப்பீட்டுத்  தொகை , அதன் உண்மையான மதிப்பை விட மிகவும் குறைவானது.
காணாமல்போன கருவிகள் எந்தவொரு பயங்கரவாதக் குழுவின் கைகளிலும் கிடைத்தால், தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் அது விமானப்படையின் பெயரைக்  கெடுக்கக் கூடும்  என்று, குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்யுமாறு விமானப்படைக்கு, சட்டமா அதிபர் பரிந்துரைத்திருந்தார்.
அனுப்புநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கமைய, குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. விசாரணை அறிக்கை இப்போது மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விமானப்படை நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு,  இழப்பீட்டை எடுக்கத் தவறிய அதிகாரியிடமிருந்து  493,438.38 ரூபா (காணாமல் போன பொருட்களின் மொத்த மதிப்பில் ஐந்து சதவீதம்) வசூலிக்க விமானப்படைத் தளபதி பரிந்துரைத்துள்ளார்.
மீதமுள்ள 98,194,092.87 ரூபாவை எம்/எஸ் கெயார் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கவும், வேறு எந்த அரசு நிறுவனங்களும் இதனுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்தும், நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments