தமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை?


வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களமிறங்கியுள்ள எவருக்கும், வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையில்லை.

அவர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இங்கு வருகிறார்களே, ஒழிய அவர்களுக்கு இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீரக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.
வடக்கில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இதனை வைத்துதான் அனைவரும் அரசியலில் ஈடுபட்டார்கள்.

சர்வதேசம்வரை இதனை கொண்டு சென்றார்கள். இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால், வடக்கிலுள்ள மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.
ஆனால், வடக்கிலுள்ள மக்களின் எந்தவொரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதுவே உண்மையாகும்.
யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து இது நீடிக்கிறது. காணி, கல்வி, தொழில், வீட்டுப் பிரச்சினை என எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

முக்கியமாக அவர்களின் உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை. சிங்கள மக்கள் கூறுவதைப் போல தமிழர்கள் வாழ வேண்டிய அவசியமில்லை.
சிங்களவர்களுக்கு இருப்பதைப் போல, தமிழர்களுக்கும் தனி உரிமையும், சுயகௌரவமும் இருக்கின்றது. இதனை முழுமையாக வழங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.
இந்த உரிமையை நாம் வழங்க வேண்டும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். தேசிய வாதம் என்பது பிறப்பிலேயே உருவாவது.

தமிழர்களின் அரசியல் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்வரை தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கும் இந்நாட்டில் முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்பதே உண்மையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments