நீதி கேட்கிறது ஆசிரிய சங்கம்?

வடமாகாணக் கல்வியில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுனரின் செயற்பாடானது ஆளுனரும் முறைகேட்டாளர்களைப் பாதுகாத்து வருகின்றாரா? எனச் சந்தேகம் கொள்ள வைப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கும் இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முறைகேடுகளை விசாரிக்க முறையான விசாரணைக்குழு கூட அமைக்காத அவரது செயற்பாட்டுக்குமிடையே காணப்படும் இரண்டை தன்மைகள் கவலைக்குரியது.
இலங்கை ஆசிரியர் சங்கம் சகல குற்றச்சாட்டுக்களையும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாகவே சமர்ப்பித்திருந்தது. அக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளையும் கோரியிருந்தது. ஆனால், விசாரணைக் குழுவை நியமிக்காத காலதாமதத்தால் குறித்த பாடசாலையொன்றில் மிக அவசரமாகப் போலியான பற்றுச்சீட்டுக்கள் போடப்பட்டு வருவதாக ஆளுனர் செயலகத்தினருக்கும் தெரிவித்திருந்தோம்.
நாம் குறிப்பிட்ட எம்மிடமுள்ள ஆதாரங்கள் நிறைந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், குறித்த அதிபரொருவர் தொடர்பான தமது ஆரம்பக் கட்ட விசாரணையில் குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வியமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி கல்விச் சமூகத்தின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் சில ஆதாரங்களை வடமாகாண ஆளுனரின் மின்னஞ்சல் முகவரிக்கும் கூட அனுப்பி வைத்திருந்தோம். சாட்சியங்களையும், சாட்சியாளர்களையும் விசாரணைக்குழுவில் முன்னிலைப்படுத்துவோம் எனவும் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் வடமாகாணக் கல்வியில் நிகழும் பாரிய நிதிமோசடிகளையும், முறைகேடுகளையும் மறைக்கும் விதமாக வடமாகாணக் கல்வியதிகாரிகளின் ஆரம்பக் கட்ட விசாரணை நடந்துள்ளனவா? விசாரணை நடைபெற்றதாயின் முறைப்பாட்டை மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடமிருந்து தகவல்களை ஏன் கோரவில்லை?
வடமாகாண ஆளுனரின் செயலணியொன்று குறித்த பாடசாலைக்குச் சென்றதாகவும், அப்பாடசாலைகளில் நிதிமுறைகேடுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் கூட ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் வடமாகாண ஆளுநர் ஏன் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த மோசடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் வடமாகாண ஆளுனரும் துணைபுரிகின்றாரா? போன்ற விடயங்களை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வெளிப்படுத்தவேண்டும்.
வடமாகாணத்திலுள்ள தேசிய மற்றும்வடமாகாணப் பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென பெருந்தொகையான பணத்தினைப் பெற்றோரிடமிருந்து சில அதிபர்கள் முறைகேடாகப் பெற்றுவருகின்றனர். அவற்றில் ஒரு பகுதியினை தமது தனிப்பட்ட கணக்குகளிலும் வைப்பிலிட்டு முறைகேடாக சொத்துக்கள் குவித்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஊடகங்களிலும் வெளிவருகின்றன.
யாழ்ப்பாணப் பிரபல கல்லூரியொன்றின் அதிபர் தாம் அடைக்கவேண்டிய தனிப்பட்ட கடனை அடுத்த வருட மாணவர் அனுமதியின் போது திருப்பி தந்துவிடுவதாகக் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. 
இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் முறைகேடுகளை நிறுத்துவதற்கு ஆரம்பப் புள்ளியைக் கூட உருவாக்க முயலாமல் இருக்கும் வடமாகாண ஆளுனரின் செயற்பாடு கவலையளிக்கிறது.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்காமல் வடமாகாணத்தினை நேர்மனப்பான்மைகொண்ட முன்னுதாரணமான கல்வி நிலைக்கு கொண்டு வருவதென்பது ஒருபோதும் சாத்தியப்படப்போவதில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வடமாகாண ஆளுனர் எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்வது தவிர்க்கமுடியாதது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments