"எழுக தமிழ்" காலத்தின் கட்டாய தேவை! வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை. இதற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் வே.தவச்செல்வம் ஆதரவு வழங்குவதாக கூறி கருத்துரைக்கும் போது தெரிவித்துள்ளார்.


எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி தொடர்பில் வட கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தமிழ் மக்கள் பேரவை கலந்துரையாடல்களை நடத்திவருகின்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ்.கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் தலைமை அலுவலகத்தில் வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் முடிவில் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு 122 கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 10 சமாசங்களை உள்ளடக்கிய வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் சார்பில் பூரண ஆதரவினை வழங்குவதாக தெரிவித்து கருத்துரைக்கும் போதே அதன் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் இவ்வாறு கூறியிருந்தார். தமிழர்கள் அரசியல் பலம்பெற்றவர்களாக மாறும்போதுதான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காணமுடியும் என்ற அடிப்படையில் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு தங்களது ஆதரவினை வழங்குவதாகவும் இதற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது பரிபூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள், எழுக தமிழ்-2019 ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களும் வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் செ.சிவஞானராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments