படையினர் இடித்தவற்றை அரசு கட்டித்தரட்டும்?


படையினரால் இடித்தழிக்கப்பட்ட எமது வீடுகளை அரசே மீள கட்டித்தரவேண்டுமென வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் க.குணபாலசிங்கம கோரிக்கை முன்வைத்துள்ளார்.

படையினரால் உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்டிருந்த எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடர்ந்த பின்னரே எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டது.

'1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி நாங்கள் மயிலிட்டியை விட்டு வெளியேறும்போது, துறைமுகத்தில் 400 கடற் கலங்களை விட்டு சென்றோம். அத்தனையும் எங்களுக்கு சொந்தமானது. எங்களுக்கு சொந்தமான எங்களுடைய நிலங்களை கேட்டு நாங்கள் போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் இப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அதில் கலந்துகொண்டு, எமது போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தார்.

எங்களுடைய காணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு தொடர்ந்தோம். வழக்கு தொடரும் வரை அப்படியே படையினர் வசமிருந்த எமது வீடுகள் வழக்கு தொடர்ந்த பின் இடித்து அழிக்கப்பட்டது.

அவ்வகையில்  அரச படைனள் அழித்த வீடுகளை அரசாங்கமே மீள கட்டிக்கொடுக்கவேண்டும். வீட்டுதிட்டத்துக்காக இப்போது எமக்கு வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் பணம் போதாது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு 30 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.

மயிலிட்டியில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ள கொமாண்டோ முகாம் அகற்றப்பட வேண்டும். அதனை அகற்றினால் 400 குடும்பங்களை அங்கே குடியேற்றலாம். எனவும் க.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments