ஜிஆர் எனும் நிழல் அச்சம்!

மீண்டுமொரு முறை இந்நாடு ஜனநாயகம் அற்ற பாதையின் வழியே பயணிப்பதற்கு உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடக்கூடுமோ எனும் அச்சத்தை தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சுட்டி நிற்கின்றது. இது ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் மனங்களிலும் - நீதியின் பக்கம் பக்கம் நிற்பவர்களின் மனங்களிலும் ஒருவித பயத்தை நிச்சயம் ஏற்படுத்தி விட்டிருக்கும்.

கோத்தாபய (ஜிஆர் - GR) ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்டிருப்பது அதிகப்படியான பெரும்பான்மை மக்களுக்கு எதிர்பார்ப்பு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைவிட இரட்டிப்பாக தமிழ் மக்களிடையில் கவலை தொற்றிக் கொண்டிருக்கும். இல்லை - அதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

எனவே ஒருவேளை கோத்தாபய வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் அது தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் காலமாகவே அமையும். மஹிந்தவின் ஆட்சியில், கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி போராட முடியாத நிலை ஏற்படும். அது தொடர்பிலான வழக்குகள் காணாமல் ஆக்கப்படும். அதுபோல், இப்போது நடை பெறும் பௌத்த மயமாக்கலுக்கான எதிர்ப்பை காண்பிக்க முடியாமல்ப் போகும். இராணுவத்தின் காணி அபகரிப்புக்களை எதிர்த்து நிக்க முடியாது. இப்போதிருக்கும் இந்த உரிமைகள் நிச்சயம் பறிக்கப்படும்.

ஏனெனில் இந்த ஆட்சியில் இத்தகைய உரிமைகளை நாம் இழக்கவில்லை என்றாலும் செயற்பாட்டாளர்கள் -பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலைச் சந்தித்தனர். நீதி கிடைக்கும் என்று நம்பி அநீதிகளினால் ஏமாற்றமடைந்தோம். எனவே கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிடும். அதற்கு தமிழ் மக்கள் ஆகிய நாம் துணைபோய் விடாமல் இருப்பதே ஆகச் சிறந்த முடிவாகும். ஆனால் அது நடக்குமா? நடக்காதா? என்பது தமிழ் மக்களின் கைகளில் மட்டுமல்ல நீதியின் பக்கம் நிற்கும் சிங்கள மக்களின் கைகளிலும் தங்கி இருக்கின்றது.

சண்டே ஒப்சேவரில் இன்று வெளியான ஆங்கிலக் கட்டுரையின் ஒரு பகுதியில் கட்டுரையாளர் சரத் டி அல்விஸ் "கோத்தாபயவின் வளர்ச்சி; அரசியல் உயரடுக்கினை மக்கள் நிராகரித்ததன் விளைவாகும். ஜனநாயகம் இறந்து சர்வாதிகாரிகள் உருவாக்கப்படுவது அப்படித்தான். ஜனநாயகம் இறந்துவிடுகிறது; சர்வாதிகாரிகள் பெரும்பான்மையின் ஒப்புதலால் பிறக்கிறார்கள்" இவ்வாறு சிறந்தவொரு கருத்தை முன்வைத்திருந்தார்.

இப்போதிருக்கும் அரசாங்கம் சரியாகச் செயற்பட்டு தாம் 'ஆட்சிக்கு வரும் போது' வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, மக்கள் மனங்களை வெற்றி கொண்டு இனவாதம், உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதம் ஆகியவற்றை தலைதூக்க விடாமல் நாட்டைப் பாதுகாத்திருக்குமாக இருந்தால், கோத்தாபய எனும் நிழல் அச்சம் இன்று எழுந்திருக்காது. சரத் டி அல்விஸ் கூறியது போல் சர்வாதிகாரிகளை பிறப்பெடுக்கச் செய்யக் கூடிய பெரும்பான்மை ஒப்புதல் வலுப்பெற்றிருக்காது!.

ஞா.பிரகாஸ்

No comments