இறுகுகின்றது வடகடல் நிறுவன மோசடி விசாரணை?


அரச நிதியை மோசடி செய்தமை குறித்து , வட கடல் நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர்களும்; ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வடகடல் நிறுவனம், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்து.

இதற்கமைய, குறித்த நிறுவனத்தின் கீழ் லுனுவில, வீரவில மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிகளில் மூன்று மீன்பிடி வலை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், குறித்த மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உரிய விலைமனு கோரலின்றி தரக் குறைவான நைலோன் நூலை இந்திய நிறுனமொன்றின் ஊடாக இறக்குமதி செய்ததன் மூலம், அரச நிதியை மோசடி செய்ததாக வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன் மீது ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,அத்துடன் ,குறித்த நைலோன் நூல் கொழும்பு துறைமுகத்தினூடாக கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவை வடகடல் நிறுவனத் தலைவரின் கீழ் இயங்கும் போக்குவரத்து சேவை நிறுவமொன்றின் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள வடகடல் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்து குறித்த நூல் தொகை வீரவில மற்றும் லுனுவில நிறுவனங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதன்போது ,போக்குவரத்துக்காக,அமைச்சின் வாகனங்கள் இருக்கின்ற போதிலும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் எஸ். ரி பரமேஸ்வரன் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமது சொந்த வாகனங்கள் மூலம் அவற்றை கொண்டுசென்று அதற்கான நிதியையும் அரசாங்கத்திடமிருந்து அறவிட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வலைத் தயாரிப்புக்காக உயர்தரத்துடனான நூலை இறக்குமதி செய்ய முடிந்த போதிலும், வட கடல் நிறுவனம், குறைந்த தரத்திலான நூலையே இறக்குமதி செய்துள்ளதாகவும், இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன், அதன் பொது முகாமையாளர் மற்றும் கணக்கதிகாரி ஆகியோரிடம்   ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்து.

No comments