அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?- தக்‌ஷினா கண்ணன்

ஒரு நிகழ்ச்சி முடிந்த பின்னரும், அந்த நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் பரவலாக பகிரப்படுகிறது என்றால், அது இதுவாகத்தான் இருக்கும்”.
 அந்த அழைப்பிதழ் ஆகஸ்டு 11 ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் நூல் வெளியீட்டு விழா.

“ஆகஸ்டு 11 ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் நூலான, ‘Learning... Listening... Leading' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் அழைப்பிதழ்தான் இன்று சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏனென்றால் அழைப்பிதழில் ரஜினியின் பெயரே இல்லை. துணைக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ளும் விழாவில் அழைப்பிதழில் பெயரே போடப்படாத ரஜினி காந்த் கலந்துகொண்டது எப்படி? அரசின் உயர் பதவிகளில் இருக்கும் முக்கியஸ்தர்களின் விழாக்களில் கலந்துகொண்டு ரஜினி பேசியது எப்படி என்பதுதான் இப்போது விவாதமாகிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் விழா ஆரம்பிக்கும்போது ரஜினி வரவில்லை. சற்று தாமதமாகத்தான் வந்தார்.

இத்தனை புரோட்டாகால்களையும் மீறித்தான் ரஜினி அந்த மேடையில் காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிவிட்டு, மகாபாரதத்தின் கிருஷ்ணர் -அர்ஜுனர் போல மோடியும் அமித் ஷாவும். ஆனால் இவர்களில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்குதான் தெரியும் என்று பேசினார்.

ரஜினி இந்த விழாவுக்கு வந்தது எப்படி என பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன. ‘ரஜினிக்கு சில வாரங்களாகவே மும்பையில் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தது. ஆனால் போனவாரம் மும்பையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். எதிர்பாராமல் கிடைத்த இந்த நாட்களை சில அரசியல் விமர்சகர்களை சந்தித்துப் பேச பயன்படுத்தியிருக்கிறார் ரஜினி. அந்த வகையில்தான் வழக்கமான சந்திப்பாக ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி.

அப்போது காஷ்மீரில் அமித் ஷா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையும், நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் செயல்பாடுகளையும் தான் வெகுவாக ரசித்ததாக குருமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்ட ரஜினி, ‘மகாபாரத கிருஷ்ணர் -அர்ஜுனர் போல இரண்டு பேரும் எனக்குத் தெரிகிறார்கள். ஆனால் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர்னுதான் தெரியலை. ரெண்டு பேரும் அவ்வளவு கெமிஸ்ட்ரியோட இருக்காங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போதுதான் குருமூர்த்திக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. தமிழகத்தில் மத்திய அரசின் காஷ்மீர் அணுகுமுறைக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் ரஜினியின் இந்த கருத்து மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் சாதகமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் குருமூர்த்தி. அதனால் அவர் ரஜினியிடம், ‘இதே கருத்தை அமித் ஷா முன்னாடி சொல்லுவீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். என்ன சார் என்று ரஜினி கேட்க, அப்போதுதான் ஆகஸ்டு 11 ஆம் தேதி வெங்கையா நாயுடுவின் விழாவுக்கு அமித் ஷா வருவது பற்றி ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் குருமூர்த்தி. ரஜினியின் இந்த கமெண்ட்டை அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லி, அதன் பிறகே ரஜினி மேடையேறுவதற்கு கடைசி நேரத்தில் அனுமதி குருமூர்த்தியால் பெறப்பட்டிருக்கிறது. ஆக அந்த விழாவில் மேடையேறிப் பேசுவோம் என்பது ரஜினிக்கே தெரியாது என்பதுதான் நிஜம். துணைக் குடியரசுத் தலைவர் விழாவிலும் கூட புரோட்டோகால்களை குருமூர்த்தி நினைத்தால் மாற்றலாம் என்பதும் இந்த விழாவின் மூலம் வெளிப்பட்டிருக்கும் இன்னொரு செய்தி” .

No comments