மாயன் இனத்தின் வீழ்ச்சியில் இருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதென்ன?-சுந்தரம் இந்திரராஜா

பெரிய வளங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அதை முகர்ந்து கொள்ளும் ஆற்றலுடன், வெறி பிடித்து இருந்தன ஐரோப்பிய நாடுகள். தான் முகர்ந்து கொண்டதை, ஆயுதபலத்தால் தன் வசமாக்கும் தன்மை அவர்களுக்கு அப்போது ஊறி இருந்தது. அதில் மாயன் பிரதேசங்கள் பக்கம் தன் கண்ணைத் திருப்பியது ஸ்பெயின் நாடு.
இராணுவ அடக்கு முறையுடன் மாயனை நசுக்கிய ஸ்பானியர்களின் மத்தியில், சாந்தமான முகத்துடன் அன்பைப் பொழியும் அகிம்சை வடிவமான ‘டியாகோ டி லாண்டா’ (Diego de Landa), வித்தியாசமானவராக மாயன்களுக்குத் தெரிந்தார். "அட! இப்படியும் ஒரு நல்ல ஸ்பானியரா?" என்று அவருடன் உறவாட ஆரம்பித்தனர். மாயா மக்களுடன், மக்களாகச் சேர்ந்து வாழ்ந்தார் லாண்டா. அவர் புத்திசாலித்தனமாக, முதலில் மாயா மக்களின் மொழியைக் கற்றுக் கொண்டார். அப்படிக் கற்றுக் கொண்டவர் ஒரு நல்ல விசயத்தையும் அப்போது செய்தார். அதாவது மாயன்களின் எழுத்து முறையை அவர்களிடமே கேட்டு தனக்கென பதிவு செய்தும் வைத்திருந்தார்.
மாயன்களுடன் பழகிய ‘டியாகோ டி லாண்டா’ (Diego de Landa), படிப்படியாகத் தனது மத போதனையை ஆரம்பிக்கத் தொடங்கினார். கிருஸ்தவ மத போதனைகளை ஆரம்பித்தவர், மாயாக்களின் தெய்வ வழிபாட்டை விட்டு விடும்படி அவர்களை வற்புறுத்த ஆரம்பித்தார். ஸ்பானியர்களிடம் இருந்த பயத்தில் இவரது மதத்தை ஆதரிப்பது போல இருந்த மாயாக்கள், தங்கள் தெய்வங்களை இரகசியமாக வணங்கி வரத் தொடங்கினர். இரவுகளில் சில மணி நேரங்கள் காணாமல் போனார்கள் மாயாக்கள். 'இவர்கள் இரவில் எங்கே போகின்றார்கள்?' என்று ஒளிந்திருந்து பார்த்த போதுதான் லாண்டாவுக்கு அந்த உண்மை தெரிய ஆரம்பித்தது.
ஆம்..! மாயாக்கள் லாண்டாவுக்குத் தெரியாமல் இரவில் தங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோவிலுக்குச் சென்று, தங்கள் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். மாயன்களே அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் கோவிலைக் கண்ட லாண்டா மிருகம் போல ஆனார். அப்படி மிருகமான லாண்டா, செய்த மிருகத்தனமான செயலைத்தான் இப்போது உலகமே கண்டிக்கிறது. வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.
'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை மாயாக்களுக்கு உதவி செய்யும் இரட்சகர் போல வந்து சேர்ந்த லாண்டாவும் செய்தார். இந்தச் செயலை உலகில் உள்ள எவருமே ஆதரிக்கவில்லை. அனைவருமே கடுமையாகக் கண்டித்தார்கள். இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், பொன் போலக் கிடைக்கவே முடியாத பொக்கிசங்கள். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் இப்போதுள்ள பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வெகு சுலபமாக விடை கிடைத்திருக்கும்.
மாயன்களின் தெய்வங்களில் ஒருவர்தான் குக்கிள்கான். இவர் மனித வளர்ச்சிக்கும், கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார். மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில், குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365 நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளது .
லாண்டாவினால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களில், அவர் கண்ணில் படாமல் தப்பியது நான்கே நான்கு நூல்கள் மட்டும்தான். The Madrid Codex, The Dresden Codex, The Paris Codex, Grolier Codex என்பவையே எஞ்சிய நான்கு புத்தகங்களுமாகும். அவையும் பின்னாட்களில் ஐரோப்பியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, ஸ்பெயினில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும், பிரான்ஸில் ஒன்றும், மெக்சிககோவில் ஒன்றுமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மான் தோலை கடதாசியாக்கி, விசிறி போன்று மடிக்கப்பட்டு புத்தகங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன அவை.
மாயாக்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற ஆராய்ச்சியும் சிலரால் மேற்கொள்ளப் பட்டது. அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில பதில்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. மாயன்களுக்கும் தமிழர்களுக்குமே சம்பந்தம் உண்டு என்பது தான். தமிழ் இனம் மாயமாகாதவாறு காப்போம்.
 
-சுந்தரம் இந்திரராஜா-

No comments