அரசியல் தலைமைப் பதவிகளுக்கு உச்ச வயதெல்லை நிர்ணயமாகுமா? பனங்காட்டான்

ஜனாதிபதிப் பதவிக்கு குறைந்த வயதெல்லையாக 35ஐ நிர்ணயித்ததைப்போல, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு மட்டுமன்றி அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் உச்ச வயதெல்லையை
நிர்ணயித்தால் தேசிய பிரச்சனையை சமூக விஞ்ஞான கண்டோட்டத்தில் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம். இல்லையேல், இலங்கை அரசியல் என்பது வயோதிபர் மடமாகவே தொடரும்.

இலங்கையில் அடுத்ததாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்று தேர்தல் ஆணையகத்தால்கூட அறுதியிட்டுக் கூற முடியாத அரசியல் களேபரம் அங்கு உருவாகியுள்ளது.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இரண்டு மூன்று பிரிவுகளாகத் தனித்து நின்று தாம் விரும்பியவாறு ஒவ்வொன்றைக் கூறி வருகின்றன. மொத்தத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் புதுப்புது செய்திகளுக்குத் தீனி வழங்குபவர்களாக மாறியுள்ளனர்.

ஜனாதிபதி சொல்வதை மறுத்து பிரதமர் ஒன்று கூறுவார். அவர் சொல்வதற்கு ஏறுமாறாக அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கருத்து கூறுவர். எல்லாமே ஊடகங்களுக்கு பரபரப்பான செய்திகள்.

இவர்களுக்கப்பால் மகிந்த தலைமையிலான பொதுஜன முன்னணி, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு, மனோ கணேசனின் தமிழர் கூட்டணி, ஜே.வி.வி. மற்றும் சொரியல்கள் தனித்தனியாக தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பர். பாவம் அப்பாவி மக்கள்.

ஞானசார தேரரின் பொதுபல சேன தனிச்சிங்கள பௌத்த இராச்சியம் கேட்கிறது. பெயரளவில் அப்படியில்லாவிட்டாலும் இப்போது இலங்கையில் அந்த ஆட்சிதானே நடைபெறுகிறது.

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளின் சொல்லை மீறி எதையும் செய்வதற்கு மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரில் எவரும் தயாரில்லை. இப்போது இந்தப் பட்டியலில் சஜித் பிரேமதாசவும் இணைந்துள்ளார்.

தமிழருக்கு எதிராக நேற்றுக் குரல் கொடுத்த சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம், இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது. சமகாலத்தில் இந்து - சைவ ஆலயங்களையும் இவர்கள் மறந்துவிடவில்லை.

பௌத்த பிக்குகளின் கைவரிசையிலிருந்து இந்து - சைவ ஆலயங்களைக் காப்பாற்ற நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவுகள் மட்டுமே உதவுகின்றன. இவைகளுக்கு நிரந்தரமான தடையுத்தரவு கிடைக்குமென்பது சந்தேகம்.

இலங்கையின் வடக்கே 500 பௌத்த வழிபாட்டுத் தலங்களை புதிதாக நிர்மாணிக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.

அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பும் சஜித் பிரேமதாச ஒருபடி மேலே சென்று 1,123 பௌத்த விகாரைகளையும், 1000 பௌத்த சமயப் பாடசாலைகளையும் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். கண்டியில் கடந்த திங்கட்கிழமை மகாநாயக்கர்களைச் சந்தித்த பின்னர் இதனை அறிவித்த சஜித், நாட்டிலுள்ள அனைத்து தொல்பொருள் பெறுமதிமிக்க புண்ணியத் தலங்களையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

திருமலை கன்னியா பிள்ளையார், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் பிரச்சனைகளின் ஊற்றுவாயாக உள்ளதே இந்தத் தொல்பொருள் திணைக்களம்தான். இவற்றுக்குத்தான் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனைத் தெரிந்து கொண்டும் பௌத்த மத நிலைப்படுத்தலுக்கு தொல்பொருள் திணைக்களத்தை துணைக்கு இவர் அழைப்பது ஆபத்தானது.

1958ஆம் ஆண்டு இனவழிப்புக்குப் பின்னர் எத்தனை இந்து - சைவ ஆலயங்களை சிங்கள அரசும் அவர்களின் காடையர்களும் நிர்மூலமாக்கினர். இதுவரை ஆகக்குறைந்தது ஓர் இந்து சைவ ஆலயத்தையாவது இலங்கை அரசாங்கம் நிறுவி இன மத உறவை வளர்க்க முன்வந்ததா? இல்லவேயில்லை.

திட்டமிட்ட நடத்தப்பட்ட 1983இன் இனவழிப்பில் 36 ஆண்டுகள் முடிவடைந்தும் அதன் பாதிப்புக்கு இதுவரை நிவாரணமில்லை. கொல்லப்பட்ட 1800 தமிழர்களின் குடும்பங்களை அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் தத்தம் நாடுகளில் இதனை நினைவு கூர்வதால் மட்டுமே இந்த இனவழிப்பு பதிவுபெற்று வருகிறது.

தாயகத்தில் இதனை நினைவுறுத்தி ஒரு தீபம் ஏற்றுவதற்குக் கூட நேரமில்லாத தமிழ் அரசியல் தலைமைகள், அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேடலில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுத்து வரும் கூட்டமைப்பு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நிறுத்தாவிட்டால், சஜித் பிரேமதாசவையோ அல்லது வேறொரு அபேட்சகரையோ - அது மகிந்த அணியாகவிருந்தாலும் ஆதரிக்குமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் அண்மையில் தெரிவித்த கருத்துகள் உள்வாங்கப்பட வேண்டியவை.

தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து இந்த அரசினால் புறக்கணிக்கப்படுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கும் ஆதரவை விலக்கி, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஆதரவு வழங்க வேண்டி வருமென மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ. யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். இது கிழக்கின் ஒரு குரல்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் எனக்கூறக்கூடாது என்று கர்ச்சித்துள்ளார் மன்னார் மாவட்ட எம்.பி.யும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.

சிங்கள அரசு வழங்கிய நாடாளுமன்ற உபகுழுக்களின் தலைவர் பதவியையும் அதன் சலுகைகளையும் தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அடிவருடித்தனமான செயற்பாட்டின் சின்னமாக விளங்கும் ஒருவரின் அர்த்தமற்ற குரல் இது. சிலவேளை ரணில் ஓரங்கட்டப்பட்டால் குதிரையோட்டத்துக்குத் தயாராகும் அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம்.

முல்லைத்தீவிலிருந்து மூன்றாவது குரல் வந்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் எம்.பி.யான சிவமோகன் கொஞ்சம் விபரமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கான பிரச்சனைத் தீர்வை முன்னிறுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டால், தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை இவருக்கு வழங்குவார்கள் என்பது சிவமோகனின் கூற்று. இது சஜித்தை குளிர வைக்கும் அறிவிப்பு.

கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்கும் என்று சொல்லாமல், தமிழ் மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்ற கூற்று முக்கியமான உள்ளர்த்தத்தைக் கொண்டது.

'அடுத்த தேர்தலில் கூட்டமைப்பினர் கூறுவதைக் கேட்டு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்தக் காலம் மலையேறி விட்டது. கொள்கை அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன்வருபவரை அவரது வாக்கின் நேர்மையைக் கருதி தமிழ் மக்கள் சுயமாகவே சிந்தித்து வாக்களிப்பர்" என்பதே சிவமோகனின் கூற்றில் உட்பொதிந்துள்ள கருத்து.

மறுபுறுத்தில் மகிந்த அணியும் மைத்திரி அணியும் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதைக் கண்டுபிடிப்பதிலும் அறிவிப்பதிலும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன. பல சுற்றுப் பேச்சுகள் பயனின்றித் தொடர்கிறது.

ஆகஸ்ட் 12ஆம் திகதி தங்கள் வேட்பாளர் யாரென்பதை மகிந்த ராஜபக்ச அறிவிப்பாரென்று கூறப்படுகிறது. கோதபாயவுக்கு ஆதரவாக உள்வீட்டில் பலர் இருப்பினும் அவர் மீதான வழக்கு விசாரணைகளும், அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமையும் தடைக்கற்களாகவுள்ளன.

அதுமட்டுமன்றி, கோதபாய ஜனாதிபதியானால் தமது சொல்லுக்குக் கட்டுப்படாது இராணுவப் பாணியில் இயங்குவாரென்ற அச்சம் மகிந்தவுக்கு நிரம்பவேயுண்டு.

முன்னர் தீர்மானித்தவாறு சமல் ராஜபக்ச ஜனாதிபதிப் பதவிக்கும், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கும் தெரிவு செய்யப்படுவரென்று அவர்களது அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளா என்று பல கோணங்களிலிருந்தும் எதிர்க்குரல்கள் கிளம்பியுள்ளன.

பத்தொன்பதாவது அரசியல் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கான ஆகக்குறைந்த வயதை 35 ஆக்கியதால் மகன் நாமல் ராஜபக்சவை போட்டியில் நிறுத்த முடியாத நிலையில், மனைவி சிராணியை நிறுத்த மகிந்த நாட்டம் காட்டுகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில்தான் என்றிருந்த நிலை இன்றில்லை. சஜித் பிரேமதாசவுக்கு கட்சிக்குள் கணிசமான ஆதரவுண்டு.

இதனால், ஐக்கிய தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து வேட்பாளர் முடிவெடுக்கப்படுமென தந்திரோபாயமாக ரணில் அறிவித்துள்ளார்.

ரணிலின் பெரியதந்தையான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவிருந்தபோது ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக நியமித்தார். ஜே.ஆரின் பதவிக்காலம் முடிய ஜனாதிபதிப் பதவி பிரேமதாசவுக்கானது.

அதேபோன்ற ஒரு நிலைமையை ஏற்படுத்த ரணில் முயற்சிக்கிறார். இம்முறைத் தேர்தலில் தம்மை ஜனாதிபதியாக நிறுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கினால், எதிர்காலத்தில் தந்தையைப் போல சஜித் ஜனாதிபதியாகலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதே ரணிலின் தந்திரோபாயம்.

ரணிலின் இந்தக் கணக்குக்கான விடை ஆகஸ்ட் 6ஆம் திகதி தெரிய வரும். அரசியல் சாணக்கியரான ரணில் அதிகம் அலட்டத் தெரியாதவர். ஆனால், அரசியல் காய்களை சாதுரியமாக நகர்த்தத் தெரிந்தவர்.

தான் வளர்த்த வடலி மரமான பின்னர் அதில் கள் குடிக்க விரும்புபவர், இன்னொருவர் அதனைக் குடிப்பதை அனுமதிக்க மாட்டார். இதுதான் ரணிலின் மனநிலை.

இவ்விடயத்தில் ஒரு மாற்றம் வரவேண்டுமானால், ஜனாதிபதிப் பதவிக்கு ஆகக்குறைந்த வயதெல்லையாக 35ஐ நியமித்ததுபோல, இப்பதவிக்கு மட்டுமன்றி சகல அரசியல் தலைமைப் பதவிகளுக்கும் உச்ச வயதெல்லையாக ஆகக்கூடியது 70 நியமிக்கப்பட வேண்டும்.

வயோதிபர் மடமாகியுள்ள அரசியல் அரங்கின் தலைமைகள் இந்த அதிரடி மாற்றத்துக்கு உடன்பட மாட்டார்கள். மாற்றம் ஏற்படாதவரை இலங்கை அரசியல் என்பது நாற்றமெடுக்கும் கூவம்தான்.


No comments