நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழினம் - சூர்யா சேவியர்

இன்று இந்திய சதியால் (மீத்தேன்)
தமிழக ஆட்சியாளர்களின் பேராசையால்( மணல் கொள்ளை)
ஒரு குடம் நீருக்கும் அல்லாடுகிறது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிலைத்து பயன்பாட்டில் உள்ள ஒரே அணை காவிரியில் கட்டப்பட்டுள்ள கல்லணை தான்.

இத்தனை ஆண்டுகாலம் எப்படி நீடித்து நிற்கிறது என்பதை அறிய ஆங்கிலேயப் பொறியாளன் ஆர்தர் காட்டனுக்கு ஆர்வம் மேலிடுகிறது. அணைகட்டிய தொழில் நுட்பத்தை அறிவிதற்கு முயற்சிக்கிறான். ஓடும் நீரில் பொதிகள் நிறைந்த ஆற்றோட்டத்தில் பள்ளங்கள் ஏற்படுத்தி அணைகள் கட்டுவது இன்றைய நவீன காலத்தில் கூட கடினமான பணி.

மணலும் நீரும் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும் அபாயம் நிறைந்த ஆற்றுப் பரப்பில் இது எப்படி சாத்தியாமானது? எப்படி எனப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வருகிறான் ஆர்தர் காட்டன்.1839 ன் ஒரு கோடை காலத்தில் அணையை பிரித்துப் பார்க்கத் தொடங்குகிறான். 12 அடி ஆழத்துக்கு அணை தோண்டப்பட்டது.பெரும் பாறை கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இரண்டு பாறைகளை இணைப்பதற்கு எவ்வித காங்கிரீட் கலவைகளும் பயன்படுத்தப் படவில்லை. பாறைகளை ஒட்ட ஒருவித களிமண் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டான்.

ஒருவித ஒட்டும் களி மண்ணா? அது என்ன மண்? இந்தியாவிலுள்ள மண் வகைகள் நான்கு. வண்டல மண், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகள். வண்டல் மண் வட இந்திய சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்திய சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் ஆறுகளினால் கடத்தப்பட்ட மண்ணாகும்.

இந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்திய சமவெளியில் பெரும் பகுதியில் வண்டல் மண் காணப்படுகிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆறுகளின் டெல்டா பகுதிகளிலும், நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குஜராத்தின் வடபகுதியிலும், சட்டீஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது.
புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம். வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை "காதர்" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை "பாங்கர்" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணை விட காதர் மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது.

தக்காண லாவா பீடபூமியில் காிசல் மண் காணப்படுகின்றது. இது கறுப்பு நிறத்தில் உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாக உள்ள பசால்ட் பாறை உள்ள பகுதிகளில் காிசல் மண் உருவாகிறது. தமிழ் நாட்டில் நைஸ், கிரானைட், போன்ற பாறைகள் உள்ள பகுதிகளில் உள்ள மித வறட்சியான காலநிலை உள்ள இடங்களில் காிசல் மண் காணப்படுகிறது. மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் காிசல் மண் காணப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
பசால்ட் பாறை சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் மிகுந்ததாக உள்ளது. நைஸ், கிரானைட் சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் குறைந்ததாக உள்ளது. இக்களிமண் ஒட்டும் தன்மை உடையதாக உள்ளது. அதனால் நிலத்தை உழுவது கடினமாக உள்ளது. இந்தக் களிமண் தான் கல்லணையைத் தாங்கி நிற்கும் பாறைகளை ஒட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேயனான ஆர்தர் காட்டனுக்கு இது வியப்பைத் தரலாம். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இயற்கையோடு இணைந்த வாழ்வியல் சிந்தனை அது.

இந்தச் சிந்தனை உருவானதற்கான காலமும் நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது. அதை ஏராளமான சங்க காலப்பாடல்கள் விவரிக்கிறது.

"வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்"
-தொல்காப்பியம், பொருள்:65.

விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.

கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. நாம் அணை என்று பயன்படுத்தும் சொல் அணைக்கானதல்ல. கற்சிறை என்பதே அதற்கான சொல். பாலம் என்பது ஹிந்தி சொல். பாலத்திற்கான தமிழ் சொல் தான் அணை என்பது.

நமது தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவைகளுக்கு இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவை தவிர வேறு பல பெயர்களும் உண்டு.

இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது. அதனை அவர்கள் 2000 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி பராமரித்து பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆங்கிலேயனுக்கு அவை அனைத்தும் புதுமையானதே. கல்லணை உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கான உதாரணம் இது தான்.

கடற்கரையில் நிற்கும் போது அலை காலைத் தொடுகிறது. நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது நமது காலின் அடிப்பகுதி மணலுக்குள் இறங்குகிறது. மீண்டும் அலை அடிக்கிறது. மீண்டும் மணலுக்குள் நமது கால் இறங்குகிறது. இதுதான் கல்லணையின் தொழில் நுட்பம். ஓடும் நீரில் பெரும் கற்களை தூக்கிப் போடுவது. அது மணலின் அரிப்பிற்கு கீழே சென்றுவிடும். மீண்டும் மீண்டும் கற்களைத் தூக்கிப் போடுவது. ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைத்தது இப்படித்தான். அடி ஆழம் முதல் தரை வரை இப்படி ஒட்டும் களிமண் கொண்டு கற்களால் நீரை சிறைப்படித்திய வடிவமே கல்லணை.

நீரின் தேவையும்,நீரைப் பாதுகாப்பதும், அதை முறையாகப் பயன்படுத்துவதற்கான சங்க காலப்பாடல்கள் பல.

-சூர்யா சேவியர -

No comments