சொன்னபடி மாவை தலைமையில் முற்றுகை போராட்டம்?


யாழ். காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை மற்றும் அதனோடு இணைந்த பொதுமக்களது 62 ஏக்கர் காணியினை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சுமார் 300 கோடி ரூபா செலவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

குறித்த கட்டடத்தை வடமாகாணசபையிடம் கையளிக்க முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மைத்திரியிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்த போதும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இரண்டு மாதங்களிற்கு முன்னரும் இதே போன்று காணிகளை கடற்படை முகாமிற்கு சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அப்போது மாவை சேனாதிராசா காணி அமைச்சர் கயந்தவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து தற்காலிகமாக அளவீடு கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை மறுதினம் வியாழன் மீண்டும் சுவீகரிப்பிற்கான அளவீடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் மாவை சேனாதிராசா தலைமையில் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகளில் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.  

No comments