இப்படி திரைப்படம் எடுக்க துணிவு வேண்டும்- கலி. பூங்குன்றன்


"தர்மபிரபு" என்ற திரைப்படத்தைப் பற்றி "குமுதம் ரிப்போர்ட்டர்" விமர்சனம் செய்திருக்கிறது. சிவனையும், சோவையும் கிண்டலடித்து இருக்கிறார்கள் என்று ஒப்பாரி வைக்கிறது. சிவனை இந்தத் திரைப்படம் விமர்சிப்பதை விட சிவபுராண, லிங்க புராணங்கள் மிகக் கேவலமாக எழுதி வைத்திருக்கின்றன.

தாருகா வனத்து - ரிஷிப் பத்தினிகளின் கற்பை அழித்தான் சிவன். ரிஷிகளின் சாபத்தினால் சிவனின் சிசுனம் அறுந்து விழுந்ததாக எழுதி வைத்தது யார்? முதலில் அந்தப் புராணங்களை நாள் குறித்துத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு ஒப்பாரி வைப்பதே அறிவுடைமை

புராணங்கள், இதிகாசங்கள் என்பவை எல்லாம் ஆபாசக் கிடங்குகளாக இருக்கின்றனவே - அவற்றைப் படித்தால் ஒழுக்கம் வளருமா என்று சிந்திக்க வேண்டாமா?

ஆனந்த விகடனின் பழைய தீபாவளி மலர்களைப் புரட்டினால், விநாயகரை வைத்து எப்படி எல்லாம் கிண்டலடித்துக் கார்ட்டூன்கள் போடப்பட்டன என்பது விளங்கும்.

"சோ"வைக் கிண்டலடித்து வசனம் வருகிறது. "தர்மபிரபு" படத்தில் என்று குறிப்பிட்டு மூக்கைச் சிந்துகிறது அந்த வார ஏடு.

சோவே தன்னை அரசியல் புரோக்கர் என்று ஒப்புக் கொண்டவர்தானே. ("ஆனந்த விகடன்", 1.2.2012 பேட்டியில் ஒப்புதல்)

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் எடுபிடியாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப்   பேட்டிக் கண்டவர் தானே! இதனை சின்னக் குத்தூசியிடமும், எழுத்தாளர் ஞானியிடமும் ஜெயேந்திரர் சொன்னதை அவ்விருவர்களும் போட்டு உடைக்கவில்லையா? இஞ்சி தின்ற மந்தியாக "சோ" விழித்தாரே!

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்காக., அண்ணா திமுகவின் பொருளாளராக இருந்த  சவுந்தர பாண்டியனை உளவு பார்த்த பேர்வழிதானே! அவரைப் போல ஒரு பாத்திரத்தைத் திரைப்படத்தில் கேலி செய்வதற்காக ஏன் குதிக்க வேண்டும்?

ஜாதி அரசியலைத்தான் இந்தத் திரைப்படம் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. இதுபோல திரைப்படங்களை எடுப்பதற்குத் துணிவு தேவை. "தர்மபிரபு" படத்தைத் தயாரித்தவர்களின் துணிவை உள்ளபடியே மனந்திறந்து பாராட்டத்தான் வேண்டும்.

திரைப்படம் என்றால் காதல் பாட்டு, கட்டிப் புரளுவது, சண்டைக்காட்சிகள் தானா? நாட்டின் நிலவரங்களை சுட்டிக் காட்டக் கூடாதா? அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாதா? பணம் பண்ணுவதற்கென்றே மசாலா படங்களை எடுத்தால் அதனை விழுந்து விழுந்து ஓகோ என்று விமர்சிக்கும் இத்தகைய ஏடுகள் திருந்த வேண்டும். அதை விட்டு விட்டு சீண்டுகிற வேலையில் ஈடுபடுவது ஏடு நடத்துவோருக்கு அழகல்ல.

இந்தக் கட்டுரையில் "எங்களப்பன் குதிருக்குள் இல்லை" என்று சொல்லுவது போல ஓர் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் தகவல்  இதோ.

"2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்தே அவரைப் பற்றியும், பா.ஜ.க. பற்றியும் அவதூறு பரப்பும் காட்சிகள் தமிழ்ப்படங்களில் வெளியாகி வருகிறது. மக்கள் தவறான பாதையில் வழி நடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே கேபினட் அமைச்சராக இருந்த வெங்கையா நாடு, துணை ஜனாபதியாக பொறுப்பேற்பதற்கு ஒருவாரம் முன்பு இந்துத்துவா மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமார் 40 பேரை தணிக்கைக் குழுவில் பணி அமர்த்தினார்" என்ற தகவல் தான் அது. இந்தத் தகவலை பிஜேபியின் பொறுப்பாளர் ஒருவரின் பேட்டி வாயிலாகவே விடயத்தை வெளியில் கொண்டு வந்திருக்கிறது "குமுதம் ரிப்போர்ட்டர்."

பி.ஜே.பி. என்பது ஆட்சி அதிகாரத்தை எப்படி எல்லாம் கட்சிக் கண்ணோட்டத்தோடு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

"சோ" ராமசாமிதான் நையாண்டிக்கும், கேலிக்கும் அதிபதி என்று பார்ப்பனர்கள் ஒரு பிரச்சாரத்தைச் செய்து வைத்துள்ளார்கள். அவரையே - அந்த அதிபதியையே காலை வாருவது ஒன்றும் கடினமானதல்ல என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்து விட்டது.

15 லட்சம் ரூபாய் மதிப்பில் சட்டை அணிவதாகக் கூறும் விமர்சனம் மோடியை சாடுவதாக இருக்கிறதாம். இருக்கட்டுமே! அதில் என்ன தவறு இருக்கிறது? உண்மையைதானே சொல்லியிருக்கிறார்கள். உண்மை எப்பொழுதும் சுடத்தான் செய்யும். துடிப்பவர்களை வைத்தே "தர்மபிரபு" நல்ல திரைப்படம்தான் என்று நற்சான்று கொடுத்து விடலாம் தான். நாட்டுக்கு இதுபோன்ற திரைப்படங்கள் தான் தேவை!

No comments