திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்


ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் . தொல்பொருள் வலயமாக காணப்படும் இந்த மலையில் பாரிய அளவில் கல் அகழ்வு இடம்பெற்று செல்கின்றமையே இதற்கு காரணம் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்துள்ள வாவெட்டி ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா அன்று ஆலயத்திலிருந்து வாவெட்டிமலை சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கு விசேட பூசைகள் நடைபெற்று வேட்டையாடி ஆலயம் திரும்புவது வழமையாகும். போரால் இது தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெறும் நாளில் மக்கள் வாவெட்டி மலைக்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில் இன்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா நடைபெறும் நிலையில் இந்த மலையில் வழிபாடுகள் இடம்பெற்றது .

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக உயர்ந்த மலையாக இது காணப்படுகின்றது. இந்த மலையில் சுமார் 1800ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வன்னியை ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயம் உருவாக்கப்பட்டு வழிபட்டு வந்தமைக்கான சான்றுகள் இன்றும் அங்கு காணப்படுகின்றன.மலையின் உச்சியில் ஆலயம் இருந்தமைக்கான கற் தூண்கள் மலையின் உச்சியில் கொடி நாட்டப்பட்டமைக்கான கொடிப்பீடம் ஆகியன இன்றும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருள் அடையாள சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த மலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கருங்கல் அகழ்வு பணிகள் மிக தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது . நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான டிப்பர் மூலம் கருங்கல் வெளியிடங்களுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றது . தென்பகுதியை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் அனுமதிகளை பெற்று இங்கே கல்லுடைக்கும் ஆலைகளை அமைத்து மிக பெருமெடுப்பில் கல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்கள் . இதனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை அழிவடைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .தொல்பொருள் திணைக்களத்தின் ஆளுகையில் இருக்கும் இந்த மலையில் தொல்பொருள் இடங்கள் அழிவடையும் வகையில் எவ்வாறு அகழ்வு பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் . ஈழ தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் பாதுக்காகவேண்டும் எனவும் மக்களை வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

No comments