கிழக்கை தாரை வார்க்க தமிழரசு தயாராக இருந்தது?தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஒன்றாகச் செயற்பட்ட அமைப்புக்கள்,கட்சிகள் அனைத்தும் அரசியலிலும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தங்களுக்குள் இருக்கும் சில்லறைக் குறைபாடுகளை முன்னிறுத்தி எமது ஒற்றுமைக்கு எவரும் குந்தகம் விளைவிக்காது இருப்பார்களாக என அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.


யாழில் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக ஒரே விதமாகச் சிந்திப்பவர்கள் ஒன்றுபடாவிட்டால் சலுகைஅரசியல் ஒன்றே தமிழர்களுக்கு முக்கியம் என்ற சிந்தனை எம் மக்களிடையே வேரூன்றிவிடும்.

உரிமைகளுக்கான தமிழ் மக்களின்  நீண்டகாலப் போராட்டம்  மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையிலும் அதேசமயம் ஒருதிருப்புமுனையிலும் இன்று நின்று கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியபோராட்டத்தின் வரலாற்று நூலில் சிங்களஅரசாங்கங்களினால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட ஒரு அத்தியாயமும் அதே நேரத்தில் தமிழ் மக்களை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிய ஒரு அத்தியாயமும் எழுதப்படுவன என்று எதிர்பார்க்கலாம்.

வரலாற்றில் இருந்து எந்தப்படிப்பினைகளையுங் கவனத்தில் கொள்ளாமலும் மக்களின் ஆலோசனைகள்,கருத்துக்களை உதாசீனம் செய்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதன் விளைவுகள் பாரதூரமானவை. எவ்வாறு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திரத்துக்கு பின்னர் எம் கண் முன்பே பல்லாயிரக்கணக்கான எமது பூர்வீகநிலங்கள்  அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ அதேபோல கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் பதவிக்கு வந்து ஆட்சி நடத்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கண்களுக்கு முன்பாகவே வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்து குடியேற்றத்திட்டங்களை பாரியளவில் மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு மிகவிரைவிலேயே தமிழ் மக்களின் கைகளை விட்டுச்செல்லும் அபாயம் இன்று ஏற்பட்டுள்ளது. மகாவெலித் திட்டம் தற்போது முல்லைத்தீவு நகரத்தையும் உள்ளடக்கியுள்ளது.அத்துடன்,வடக்குகிழக்கு நிலத்தொடர்பை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு தாயகக்கோட்பாட்டை மறுக்கும் நடவடிக்கைகளும் கடந்த சிலவருடங்களாக மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந் நிகழ்வுகள் சம்பந்தமாக கரிசனை கொண்டிருக்கின்றது என்று நம்பமுடியாமல் இருக்கின்றது. காலஞ் சென்ற அஷ்ரப் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சிதென் கிழக்குமாகாணமொன்றை முஸ்லீம்களுக்குத் தாரைவார்க்க ஆயத்தமாக இருந்தது என்றும் அதன் காரணமாகவே கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தைத் தரம் உயர்த்ததமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதன் நம்பகத்தன்மையை நாங்கள் ஆய்ந்தறியவேண்டும். அவ்வாறு அறிந்தால் கிழக்குமாகாணசபையில் 11 தமிழ்ப் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு ஏழு பிரதிநிதிகளைக் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவிகொடுக்க சம்பந்தன் ஏன் முன்வந்தார் என்பது புரிந்துவிடும். இன்று கிழக்கில் தமிழ் மக்கள் நலிவுற பிறமக்கள் கோலோச்சுகின்றார்கள். தமிழ் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இன  அழிப்பு யுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்கள் எந்த நிவாரணங்களும் இன்றி அதே வலிகளுடனும்,சுமைகளுடனும் இழப்புக்களுடனுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ராஜதந்திரம்,விட்டுக்கொடுப்பு என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்ற வார்த்தைப் பிரயோகம் இன்று காணாமல் போய்விட்டது.  சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசாங்கம் காப்பாற்றப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் வீதியில் போராட அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்ற நிலைமையே தொடர்கிறது. இதனால்த்தான் எமது போராட்டம் மிகவும் இக்கட்டான ஒரு நிலைமையில் நின்றுகொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.

எனினும் இந்த இக்கட்டான நிலைமை எமது மக்களை இன்று விழிப்படையச்செய்துள்ளது. தாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள். சலுகைகளை விடஉரிமைகளே பெரிது என்று இத்தனை காலமும் வலிகளை சுமந்து வந்த எமது மக்கள், இது எமது'தலைவிதி'என்று கூறி சோர்ந்துதுவண்டுபோகத் தயாராக இல்லை. தமது தலைவிதியைத்தாமே தீர்மானிப்பதற்கு அவர்கள் தயாராகி வருகின்றமையை அவர்களுடன் நான் மேற்கொண்டு வரும் சந்திப்புகளில் இருந்து புரிந்துகொண்டுள்ளேன். அதனால் தான் எமது போராட்டம்  இன்று ஒருமுக்கியமான திருப்புமுனையில் நின்றுகொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.

உரிமை அரசியல் வேண்டும் என்றவர்கள் எவ்வாறு டக்ளஸ் தேவானந்தா போல் சலுகை அரசியலுக்குள் உள் நுழைந்தார்களோ நான் அறியேன். டக்ளசை பச்சைபச்சையாய் 'துரோகி' என்றவர்கள் எவ்வாறு இன்று அவர் வழியில் போகத் துணிந்துவிட்டனர் என்றும் விளங்கவில்லை.

'தருவதைத்தா'என்று அரசாங்கத்திடம் மண்டியிடாமல்  எமது உரிமைகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல்,பொருளாதார மற்றும் சமூக வளங்கள் மற்றும்  வாய்ப்புக்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை நாம் மேற்கொள்ளவேண்டும்.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒத்த சிந்தனைகள்,கருத்துக்கள் உடையவர்கள் ஐக்கியப்பட்டு உபாயங்களை வகுத்து செயற்படவேண்டும்.  தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதியுடன் செயற்பட்ட ஏராளமான அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள்,கல்விமான்கள் மற்றும் கலைஞர்களை நாம் இன்று இழந்துள்ளோம். 

இன்று எஞ்சி இருப்பவர்கள் சொற்ப அளவினரே. ஆகவே,நாம் பல அணிகளாகத்தனித் தனியே நின்று சாதிப்பதில் இருக்கும் கடினங்களை புரிந்துகொண்டு அடம்பன் கொடியாக திரண்டுமிடுக்காக எழுந்து நிற்கவேண்டும்.  புலம்பெயர் அமைப்புகளும் தமது அரசியல் பொருளாதார செயற்திட்டங்களை மறுசீரமைத்து,விரிவுபடுத்தி இளையோர்களை உள்ளீர்த்து செயற்படுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகின்றன.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு;ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை இன்றேல் அனைவர்க்குந் தாழ்வே மற்றும் குற்றம் பார்க்கில் சுற்றமில்லை போன்ற எமது மூதோர் மொழிகள் எம்மால் மீண்டும் சிந்திக்கப்படவேண்டியமுதுமொழிகள்.

சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே சிங்களத் தலைவர்கள் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சம்பந்தமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்கான வழி அமைப்பையும் அன்றே தயாரித்துவிட்டார்கள். அந்தவழிபடத்தில் இருந்துவந்ததே 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம். இன்று கூட வடமாகாணசபைக்கு சிங்களம் மட்டும் கடிதங்கள் பலவந்து கொண்டிருக்கின்றன.

1970களில் கலாநிதி பதியுடீன் மஹ்மூத் கல்வி மந்திரி ஆனவுடன் முஸ்லீம் தலைவர்கள் தமது இனத்தின் கல்வி,சமூகமற்றும் பொருளாதார மேம்பாடு,காணிகள் என்று பல விடயங்கள் பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். 

கல்வியில் பெயர் போன எமது தமிழினம்,திறமைக்குப் பெயர் போன எமது மூத்த இனம்,நீயோ நானோ என்ற அகந்தைவழிப் போராட்டத்தில் திளைத்து எல்லாவற்றையும் கோட்டை விட்டுநிற்கின்றது. இன்று கூட 'அவர்கள் வேண்டாம் நாம் மட்டும் தான்' என்ற அகந்தை ஒலிகேட்டுக் கொண்டே இருக்கின்றது. முஸ்லீம் தலைவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையின் சிறப்பை வெளிக் கொண்டு வந்துவிட்டார்கள். என்றுதான் மாறுமோ தமிழர்தம் சிந்தனைகள் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.No comments