புதிய பேச்சாளர்களாக சுமந்திரனுடன் சிறீதரனும்?


விடுதலைப்புலிகள் போதைப் பொருள் விற்பனை மூலம் வருமானம் ஈட்டியதான இலங்கை ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களிற்கு கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுவருகின்றது.

உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினர் என்று இலங்கை அரச தலைவர் பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டை மறுதலித்துள்ள நிலையில் தற்போது சிறீதரனும் கண்டித்துள்ளார்.

சத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்த்தது.

கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய புலிகளின் தலைமைக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வேண்டிய நிலையை இலங்கை இராணுவம் ஒருபோதும் உருவாக்கியிருக்கவில்லை.

1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு தமது ஆயுதப்போராட்ட வாழ்வை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர்.

1988,1989களில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் இந்த உலகமே அறிந்த வரலாறு.

சாதாரண சிங்கள குடிமகன் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும், அதன் கொள்கைகள், கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு, அமைப்பினதும், அதன் தலைவரதும் புனிதத்தன்மையை மதிக்கின்றனர்.இன்றுவரை எந்தவொரு அரசதலைவராலும் புலிகள் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையிலும், மகிந்தராஜபக்சவாலும், ரணில் விக்ரமசிங்கவாலும் மனநிலை குழம்பிப் போயுள்ள ஜனாதிபதி வெளியிட்டுள்ள இக்கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளதெனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

No comments