தமிழர்கள் 2ஆம் தரப் பிரஜைகளாம்:இரா.சம்பந்தன்


சிங்கள பௌத்த மயமாக்கல் வடகிழக்கு மாகாணங்களில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீா்வு விடயம் இழுத்தடிக்கப்படுவதாக தமிழ் மக் களும், நாங்களும் அச்சமடைந்திருக்கிறோம்.

மேற்கண்டவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே

அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், யுத்தம் முடிந்து தற்போது 10 வருடங்கள் கடந்தபோதும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.

சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் உதவியது.

இதனால் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிரு க்கவில்லை. நாட்டை பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ

தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும். நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சமூக, கலாசார உரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை உங்களால் மறுக்க முடியுமா? 1956 ஆம் ஆண்டில் இருந்து வட கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகிறதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகிறது.

எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு.

அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள். எனவே உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.

தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமையை கோருவதற்கான அனைத்து தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் நாம் அவ்வாறான தீர்மானத்திற்கு செல்லவில்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனவே அனைத்து மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுவீர்கள் என எண்ணுகின்றேன்” என்றார்.

No comments