நாவற்குழி சம்புத்தி விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது?


யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.  

பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

ஆனால் சென்ற ஆண்டு ஆவணி மாதம் 30 ஆம் திகதி உரிய ஆவணங்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. விகாரை கட்டப்படும் காணி இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது என்பதால் காணியில் விகாரை கட்டுவதற்கு கொழும்பில் உள்ள வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால் விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.

No comments