ஊடகப்படுகொலைகள்:தமிழருக்கொரு நீதி?
கொழும்பில் கொல்லப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சம்பவங்களின் பின்னணியில் இலங்கை படைப்புலனாய்வு பிரிவே இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுவருகின்றது.
எனினும் வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தாது இலங்கை அரசு திருட்டு மௌனம் சாதித்துவருகின்றது.
அதே இராணுவ புலனாய்வு பிரிவினரால் அரங்கேற்றப்பட்ட தமிழ் ஊடகவியளார்களது படுகொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றி இலங்கை அரசு மௌனம் காத்துவருகின்றமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கோப்ரல் லலித் ராஜபக்ச இனங்காணப்பட்டுள்ளார்.
மருதானையில் திரிபொலி முகாம் என்ற பெயரில் இயங்கிய புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினர், உபாலி தென்னக்கோனின் வாகனத்தில் கோப்ரல் லலித் ராஜபக்சவின் கைரேகைகள் பதிந்திருந்த நிலையில், அவரை கடந்த 7ஆம் திகதி இரவு கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கிலும் கோப்ரல் லலித் ராஜபக்ச தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால், அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும், இந்த வழக்கில் சந்தேக நபராக அவரது பெயரையும் சேர்க்குமாறும் சட்டமா அதிபர் நேற்று குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டக்கோவையின் கீழ், கீத் நொயாரை கடத்தியது, தாக்கியது, கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள், கோப்ரல் லலித் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்படவுள்ளன.
கோப்ரல் ராஜபக்ச இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமைக்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வடகிழக்கில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட 39 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமிழ் ஊடக அமைப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.
எனினும் இன்று வரை தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment