நொட்டை பிடிக்கவேண்டாம் - கூட்டமைப்பிற்கு மனோ அட்வைஸ்

அமைச்சரவை தீா்மானம் ஒன்றை சமா்ப்பித்தவுடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படு வாா்கள் என நான் கூறவில்லை. அரசியல்ரீதியாகவும் அரசியல் கைதிகள் விடுதலைக்கு முயற்சி க்கிறேன். என அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். 
அவரது உத்தியோகப்பூர்வ முகநூலில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் 
ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும். அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடுத்த நிமிடம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நான் கூறவே இல்லையே? 
இப்படி நினைப்பதே குழந்தைத்தனமான சிந்தனையாகும். அமைச்சரவை பத்திரம் என்பது, சில யோசனைகளை தெரிவித்து, சில தீர்மானங்களை எடுக்கும்படி அமைச்சரவையை கோரும். பொது மன்னிப்பு, சட்டமா அதிபர் வழக்குகளை மீளப்பெறல் அல்லது பிணை வழங்குதல், 
பொலிஸ் வழக்குகளை மீளப்பெறல், புனர்வாழ்வளித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை பரிசீலிக்கும்படியான தீர்மானங்களை எடுக்கும்படி ஜனாதிபதி உட்பட துறைசார் அமைச்சர்களை, சட்டமா அதிபரை இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கோரும்.
அடுத்தது, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை கொண்ட அமைச்சரவைதான் இந்நாட்டின் அதியுயர் அரசியல் அதிகார பீடமாகும். இங்கே எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் அதிகார தீர்மானங்களாகும். இதைவிட வேறு ஒரு அரசியல் பீடத்தை நோக்கி 
நாம் ஓட வேண்டியதில்லை. எது எப்படி இருந்தாலும் சட்ட வழியில், தமிழ் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியாது போயுள்ளது. இந்த காரணத்தினாலேயே இன்று இந்த பிரச்சினை எரியும் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஆகவேதான் இதை அரசியல் ரீதியாக தீர்க்க முயல்கிறேன். அமைச்சரவை ஒரு நீதிமன்றம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் கிடைக்காத முழுமையான தீர்வை மக்கள் மன்றத்தில் காண நான் முயல்கிறேன்.
எனது அமைச்சரவை பத்திரம் மூலம் இந்த பிரச்சினை தேசிய அரங்குக்கு வரும். அதன் மூலம் தீர்வை நோக்கி நகரும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரச்சினை அமைச்சரவைக்கு போகின்றது. எடுத்த எடுப்பிலேயே இதில் குறை கண்டு, 
பிழை தேடி, முயற்சியை முடமாக்கி விடாதீர்கள். ஆகவேதான் எனக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து கட்சிகளையும் நான் கோரியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

No comments