நீராவியடி :மக்கள் பின்னே அரசியல் தலைவர்கள்?


மக்கள் தலைமை தாங்க அரசியவ் தலைவர்கள் மக்கள் பின்னே அணிதிரண்ட முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் பக்தி பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டுள்ளது.தாயகத்தில் தமிழர்களின் உரித்தை நிலைநாட்டும் வகையில் 108 பானையில் பொங்கல் நிகழ்வு மக்கள் தலைமையில் இன்று காலை முதல் நடைபெறும் நிலையில் அரசியல் தலைவாகளும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக ஆலயத்தில் இன்றைய நாள் தமிழ் மக்கள் 108பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வில் ஈடுபட்டபோது பொங்கலுக்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும்போது, அடுப்புகளை பிக்கு அத்துமீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்கவேண்டாம் என காவல்துறையினர் பொங்கலுக்கு இடையூறு விளைவித்தனர்.

அடுப்புகளை கோவிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் காவல்துறையினர் மக்களை அச்சுறுத்தினர். அடுப்பிற்கும் பிக்கு அத்துமீறி குடியிருக்கும் கட்டடத்திற்கும் மிக நீண்ட இடவெளி இருந்த போதிலும், அங்கு இருக்கின்ற பிக்கு மற்றும் சில சிங்கள மக்களுடைய பேச்சினை கேட்டு பொலிஸார் குழப்பம் விளைவிப்பதாக தமிழ் மக்கள்; சீற்றங்கொண்டிருந்தனர்.
மேலும் தொடர்ந்து காவல்துறையினரின் அச்சுறுத்தலினை அடுத்து சில அடியவர்கள் கோவிலுக்கு வெளியில் வீதியின் இருமருங்கும் பொங்கலை மேற்கொண்டுள்ளனர்.

No comments