தாயுமானவன்! அவன் பிறந்திருந்தான். அவன் என் மகன்.

பிஞ்சுக் கால்கள் நோஞ்சானாக இருந்தன.முற்றாத மெல்லிய எலும்புகள் தோலால் போர்த்தப்பட்டிருந்தன.அசைக்கவும் தெம்பில்லாத தேகம்.பாலுக்காக செவ்விதழ்கள் விரிய அழுது கொண்டிருந்தான்.சத்தம் வரவில்லை.
Yes he is a premature baby. அவன் போதிய வளர்ச்சி அடையாத குழந்தைகளுடன் இருந்தான்.ஜீவ மரண போராட்டம்.

மனைவியை தேடினேன்."இது தன் பிள்ளையே இல்லை" என்று வெறி கொண்ட மட்டும் உதறிவிட்டுப் போயிருந்தாள்.

"குழந்தையை என்ன செய்வது? யாருக்காவது கொடுத்து விடவா ?" என்று தலைமை மருத்துவர் வினாக்களுடன் என் கண்களுக்குள் ஊடுறுவினார்.

"இல்லை இந்த எலும்புகளும்,தோலும் என் உயிரணுக்களின் பிரதிகள்.எனக்கு இவன் வேண்டும்" என்றேன்.

"சற்றே சவாலான பணிதான்,சாதித்து தான் பாருங்களேன்"

சாதாரண பிள்ளைகளைப் போல் வளர்க்கும் பணியில்லை.

கங்காரு தன் குட்டியை சுமப்பது போது என் மார்புடன் பிணைத்து விட்டார்கள்.மூக்கிலும் கை கால்களிலும் ஏதேதோ குழாய்கள்,பெயர் சொன்னார்கள்,புரியவில்லை.இனி வரும் நாட்கள் சுமந்து வந்த கேள்விகளுக்கும் விடையில்லை.

கழிவறைக்கும் போகவே முடியாத நிலை.எப்படி தொழில் செய்வது?என்னோடு அவனையும் பராமரிக்க வேண்டியிருந்தது. உலகம் சிக்கலாய் தோன்றியது.

நகரத்தின் ஓர் எல்லையில் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை ஒட்டியிருந்த சக்கரங்களுக்கு காற்று நிரப்பும் என் கடையை விற்று விடுவதென தீர்மானித்தேன். பணத்தை வைப்பிலிட்டு செலவுகளை சமாளித்தேன்.வைத்தியர் என்ற நிலை கடந்து தோள் தந்ததெல்லாம் அவர் மட்டுமே.

என் சேமிப்பு கரைய என் மகன் செழித்துக் கொண்டிருந்தான்.இப்போது கொஞ்சம் தெம்பாக அழச் செய்கிறான்.லேசாக அசைகிறான்.போத்தலில் பாலருந்துகிறான்.மூன்று மாதங்களின் பின் வீடு திரும்பினேன்.வீடென்றால் பலகைகளால் உருவாக்கப்பட்ட ஒரு அறை அவ்வளவே.

யாரோ தெரியாத ஒரு செவிலித் தாயிடம் மகனை கொடுக்க பிடிக்கவில்லை.இருபத்து நாலு மணியும் அவனை என் கண்களுள் காக்க எண்ணினேன்.

விநியோகஸ்தரிடமிருந்து பக்கத்து தெருவிலுள்ள வீடுகளுக்கு தண்ணீர் போத்தல் சுமந்து செல்லும் பணி.குழந்தைக்கும் எனக்கும் சாப்பாடென்று ஏதோ வேண்டுமே..வயிற்றில் குழந்தையை பிணைத்த படி பணி செய்தேன்.இரவில் பக்கத்து கடைகளிற்காக காகிதப் பை ஒட்டிக் கொடுத்தேன்.

நாட்கள் நகர்ந்தன.அவன் வளர்ந்திருந்தான்,"அம்மா" என்று என்னை தான் அழைத்தான்.
என் அணைப்பினில் ஆசுவாசப்பட்டான்.
என் விரல் பற்றி நடக்க ஆசைப் பட்டான். வளர்ந்தும் வளராத என் தாடியின் மயிர்க் கணுக்களில் தன் கன்னத்தை பதித்து சுகம் கண்டான்.

மனைவி திரும்பி வந்தாள்.தன் தவறை உணர்ந்து ,நொந்து மன்னிப்பு கேட்டாள்.இவானை தன் பிள்ளை என ஏற்றுக் கொண்டாள்.என் மகனின் தாயை மன்னித்தேன். என் குடும்பத்தில் இன்னொரு நபராய் அவள் இணைந்தாள்.ஏற்றுக் கொண்டோம்.

மனைவியிடம் அணைய மகன் தயங்கினான்.சிணுங்கினான்.ஒரு வருடத்தின் முன் அவன் செவி மடுத்த அவளின் இதயத் துடிப்பின் மொழி அந்த தயக்கங்களை மறைய வைத்தது.
வாழ்க்கை வண்ணங்களை பூசிக் கொண்டது.

தெரிந்த ஒரு வாகனம் திருத்தும் கடையில் தொழில் தேடிக் கொண்டேன்.மனைவி-மகன்-நான் என வாழ்க்கை இப்போது இன்னுமின்னும் அழகாய் இருக்கிறது.
--------------------------------------------------------------

He was born premature என்ற ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு...
நன்றி
மொழி பெயர்ப்பு Mah Jabeen

No comments