பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு
கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிகழ்வினை தமிழ்மொழி ஆசிரியை திருமதி அன்பரசி அவர்கள் அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் அதன் தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன் மற்றும் நிரூசன் ஆகியோரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் அதன் நிர்வாக உறுப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் திருக்குறள் திறன் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்களின் ஆற்றுகை போன்றவை சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

திருக்குறள் திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், 2018 ஆம் ஆண்டில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் சிறப்பு நிகழ்வாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சோதிய கலைக் கல்லூரியில் வளர்தமிழ் 12 வரை கற்று நிறைவுசெய்த 16 மாணவ மாணவியர் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
புலம்பெயர் தேசத்தில் எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து வளர்தமிழ் 12 வரை கற்று நிறைவுசெய்த மாணவர்களை அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் மனதாரப் பாராட்டி வாழ்த்தியதைக் காணமுடிந்ததுடன் குறித்த மாணவ மாணவியரும் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியறிதலைத் தெரிவித்ததுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தமிழில் பேசுவதற்கு ஊக்கமளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன் அவர்கள், சோதியா கலைக்கல்லூரியின் பெருமைகள் தொடர்பில் எடுத்துரைத்தார். இன்று சோதியாவின் மாணவர்கள் முக்கியமான இடங்களில் இருப்பதாகவும் தெரிவித்தபோது அனைவரும் கைகளைத் தட்டித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அனைத்து மாணவர்களுக்குமான சான்றிதழ்களை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர்கள், சோதியா கலைக் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

இம்முறை முதன் முதலாக தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையால் அறிமுகம் செய்யப்பட்ட வளர்தமிழ் பாலர் நிலையில் கற்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். குறித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்வின் நிறைவுவரை அமைதியாக இருந்து அனைத்து நிகழ்வுகளையும் கைகளைத்தட்டி மகிழ்ந்தமையைக் காணமுடிந்தது.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள், குளிர்பானம் வழங்கப்பட்டன.

No comments