கூடியது அமைச்சரவை: மீண்டும் அமைச்சர்கள் கதிரையில்!


சர்ச்சைகளின் மத்தியில் அமைச்சரவைக் கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவை கூட்டப்படாதென ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டதுடன் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டமும் இடம்பெற்றிருக்கவில்லை.

எனினும் இன்றும் விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் மூவர் குறித்து, முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவளிக்கும் முகமாக, அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர், கடந்த 3ஆம் திகதியன்று, தத்ததமது பதவிகளை இராஜினாமா செய்திருந்திருந்தனர்.

அவ்வாறு அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் எம்.பிக்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேரே, இவ்வாறு தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும், தாங்கள் வகித்த அமைச்சுகளைப் பொறுப்பேற்பார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்கிற நிலையில், மேற்படி இருவர் மாத்திரம், இப்போதைக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments