புலிகளுடன் ஜஎஸ் இனை ஒப்பிடவே கூடாது:மனோ!


உண்மையில், இன்று புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதே உண்மையென இலங்கை அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தியா கொண்டு வந்த 13ம் திருத்தம் கூட இன்னமும் இங்கே முழுமையாக அமுலாகவில்லையென்பதையும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

அண்மைக்காலமாக முஸ்லீம் தலைவர்களும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஜஎஸ் இனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது பற்றி தெரிவித்துள்ள அவர் ஜஎஸ் என்பது வெளிநாட்டு இயக்கம். அது இலங்கையில் குண்டை வெடித்து மக்களை கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது. அது ஒரு போராட்டம் மாதிரி தெரியவில்லை. ஒரே நாளில் ஏழு குண்டுகளை வெடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து ஒருவர் விளங்காத பாஷையில் உரிமை கோருகிறார். இதற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? ஆகவே ஐஎஸ் வன்முறை இலங்கையில் ஒரு போராட்டம் கிடையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐஎஸ் வன்முறையின் பின்னணி காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.72 கன்னியர் கிடைப்பார்கள் என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகளின் போராட்ட காரணிகள் பகிரங்கமானவை. அவை நியாயமானவை. ஐஎஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒப்பிடவே முடியாது.ஆகவே இப்படி ஒப்பிட்டு பேசி காலத்தை வீணடிக்காமல் பேரினவாதத்தை துடைத்தெறிய போராட வேண்டுமெனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.


No comments