கொள்ளையர்களுடன் கூட்டில் இலங்கை பொலிஸார்?


வடமராட்சியின் உடுப்பிட்டி கெருடாவில் பகுதியில் தோட்டகாணியினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த தோட்டகாணியிலுள்ள பற்றைகளுள் எடுத்து செல்ல ஏதுவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவே விவசாயி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 கிலோகிராம் வரை நிறையுடைய கஞ்சாவே பொதுமகனொருவரது தகவல் அடிப்படையில் வல்வெட்டித்துறை காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறைக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதும் எவரையும் அவர்கள் கைது செய்திருக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக கஞ்சா கடத்துபவர்களை கைது செய்வதை விட அவர்களை காப்பாற்றவே வல்வெட்டித்துறை காவல்துறை முற்படுவதாக சொல்லப்படுகின்றது. 

இதேவேளை அப்பகுதியில் மேலும் பல இடங்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தகவல் வழங்க வல்வெட்டித்துறை காவல்துறைக்கு அழைப்புவிடுத்த போதும் அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லையெனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே உடுப்பிட்டி பகுதியில் போதை பொருள் கடத்தல் மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய லக்கி குழுவின் முக்கிய நபர்கள் சிலர் காங்கேசன்துறையிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும் முக்கிய சந்தேக நபரான லக்கி என்பவர் தப்பித்துள்ள நிலையில் ஏனைய மூவர் கைதாகியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்கள் ,பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை களவாடப்பட்ட ஒரு தொகுதி நகைகள் பனையொன்றில் மறைத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இதனிடையே குறித்த கொள்ளை கும்பல்களுடன் தொடர்புடைய வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் பற்றி பொதுமக்கள் தகவல் தர காங்கேசன்துறையிலிருந்து வருகை தந்த காவல்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.  

No comments