கதிரை சண்டையில் முஸ்லீம் தலைவர்கள்?


பதவிகளின்றி  முஸ்லீம் தலைவர்கள் இருக்கமாட்டார்களென்ற சிங்கள தேச பரப்புரை நிச்சயமாகிவருகின்றது.

மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் முஸ்லீம் தலைவர்கள் முட்டி மோத தொடங்கியுள்ளனர். 

அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். அதேபோன்று எனது மாவட்ட மக்களும் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே கட்சியும், அரசும் குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாயின் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேனென தெரிவித்துள்ளார்.

இதனிடையே சொல்லிவைத்தது போன்று சஜித் பிரேமதாச மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்க கபீர் ஹஷீமிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆயினும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்றும் குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் அத்துடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
அத்துடன் அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தை ரத்துசெய்யவேண்டும் என்றும் வெறுப்பூட்டும்வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்டவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.

அத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகிய அனைவரும் யாரையும் பாதுகாப்பதற்கோ சுயலாபத்துக்கோ பதவி விலகவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே பதவி விலக தீர்மானித்தோம். அதனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப்பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்றார்.

No comments