முஸ்லீம்களிற்கும் புலம்பெயர் அமைப்பாம்?


நாட்டில் கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குலை முன்னிலைப்படுத்தி ஐரோப்பாவில் முதல் முறையாக இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சென்று பிரான்சில் அரசியல் புகலிடம் பெற்றுள்ள இலங்கை முஸ்லிம்கள் மூவரினால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதி சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் இன்றைய ஞாயிறு வார இதழொன்று அறிவித்துள்ளது.

இந்த முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு கடந்த வாரம் முதல் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் உதவியை பெற்றுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்தே இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பு முதல் தடவையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இணைத்துக் கொண்டு ஜெனீவா நகரிலுள்ள மனித உரிமைகள் அமைப்புக்கு முன்னால், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள், தமக்கு  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம் மக்களை இம்சிக்கும் வகையில் சிங்கள பௌத்தர்கள் செயற்படுவதாக தெரிவித்து, இந்த முஸ்லிம் புலம்பெயர் அமைப்பினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்பொன்றுக்கு பணம் செலுத்தி, அந்த அமைப்பின் பெயரின் கீழ் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரையாற்றுவதற்கு பதிவு செய்துள்ளதாகவும் இந்த தேசிய வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments