இலங்கையில் ஊடகங்களை முடக்க முயற்சி!


ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளை கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்துள்ளது.

பத்திரிகையாளர் குசல் பெரேரா மீது டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய கடிதமொன்றை அடிப்படையாக வைத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர் (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டம்) விதிகள் 57 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் நியாயமற்ற முறையில் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொறுப்புள்ள அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நீண்டகாலமாக எழுதிவரும் குசல் பெரேரா நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற பத்திரிகையாளராக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒருவராகும்.
மே மாதம் 17ம் திகதி, டெய்லி மிரர் பத்திரிகையில் இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து கொள்ளையடிக்கும் சிங்கள பௌத்த வன்முறை வரை என்ற தலைப்பில் அவரது வாராந்திர கட்டுரை பிரசுரமானதை தொடர்ந்து,  குற்றத்தடுப்பு  பொலிசார் அது தொடர்பாக ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த 14ம் திகதி வெள்ளிக்கிழமை கட்டுரை வெளியிட்ட டெய்லி மிரர் பத்திரிகை அதிகாரிகளிடமிருந்து ஒரு அறிக்கையை பதிவு செய்ய போலீசார் முயற்சி செய்துள்ளனர். 'டெய்லி மிரர்' பத்திரிகை அதிகாரியிடம் இருந்து அவ்வாறான ஓர் அறிக்கையை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. எனினும் குறிப்பிட்ட அந்த செய்தியை திருத்துவதற்காக தாம் மீண்டும் வருவோம் என்று போலீசார் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. அதேநேரம், குசல் பெரேராவிடம் ஓர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி அவரது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் போலீசார் பெற்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயல் கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கு விடுக்கப்படும் சவாலாகும்,  குறிப்பாக பிரபலமான பத்திரிகை ஒன்றில் பிரசுரமான கட்டுரை ஒன்று தொடர்பாக யாரோ ஒருவரின் புகாரின் அடிப்படையில் ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளரை, பிணையில் கூட விடுவிக்க முடியாத படி,  ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவது ஒரு பயங்கரமான முன்னுதாரணமாகும் என்று சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்த சூழ்நிலையைத் தடுக்க தலையிடுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்ளும் அதேவேளை ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க இதுபோன்ற முயற்சிகளைத் தோற்கடிக்க முன்வருமாறு மனித உரிமைகளை மதிக்கும் அனைத்து தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

No comments