காணாமல் போனோர் போராட்டம் - கண்டும் காணாது போன மைத்திரி




ஜனாதிபதியின் இன்றைய முல்லைத்தீவு வருகையின் போது முல்லைத்தீவில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு நகருக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக 824 நாட்களாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடத்தப்பட்டும் ,கையளிக்கப்பட்டும் ,வலிந்தும் காணாமல் ஆக்கப்படட தமது உறவுகளுக்கு இந்த நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரான ஜனாதிபதி என்ன பதில் சொல்ல போகின்றார் .இதுவரையில் பலமுறை ஜனாதிபதியின் கவனத்துக்கு தமது பிரச்சனையை நேரில் கூறியும் கூட இந்த ஜனாதிபதி தமக்கு இதுவரையில் நீதியை பெற்றுத்தரவில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து உரிய பதிலை தரவில்லை எனவும் தெரிவித்து முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி வருகின்ற இன்றையதினம் தமது பிரச்னையை தெரிவிப்பதற்காக கவனயீர்ப்பு ஒற்றை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ,புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த கவனயீர்ப்பு இடம்பெற்றது .போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இனத்துக்கு ஒரு நீதியா இலங்கை அரசே ?,நாட்டின் ஜனாதிபதியே எம்மை ஏன் கைவிட்டீர்கள் ,கால நீடிப்பு கொடுத்த கூட்ட்டமைப்பு எங்கே ?, முடிவில்லா துயரம் தமிழ் தாயின் தலைவிதியா ?,காலம் கடப்பதால் உண்மைகளும் மறைக்கப்டுகின்றது,யார் பதவியிலிருந்தாலும் பொறுப்பு கூறவேண்டியது இலங்கை அரசாங்கமே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த கவனயீர்ப்பு இடம்பெற்ற வீதியால் பார்த்துக்கொண்டு சென்ற போதிலும் இவர்களின் போராட்டம் குறித்து செவிசாய்க்கவில்லை 

No comments